உள்ளூர் செய்திகள்
கைது

சிதம்பரம் அருகே தனியார் இரும்பு ஆலையில் திருடிய கொள்ளையன் கைது

Published On 2022-01-28 15:57 IST   |   Update On 2022-01-28 15:57:00 IST
சிதம்பரம் அருகே தனியார் இரும்பு ஆலையில் திருடிய கொள்ளையனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிதம்பரம்:

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள புதுச்சத்திரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் தனியார் இரும்பு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த இரும்பு ஆலையில் அறிவழகன் (வயது 65) என்பவர் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இரவு தனியார் இரும்பு ஆலையில் புகுந்த மர்ம நபர் அங்கிருந்த இரும்பு பொருட்கள் மற்றும் எந்திரங்களை திருடி சென்றார்.

இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அறிவழகன் மர்ம நபரை துரத்தி சென்று பிடிக்க முயன்றார். ஆனால் அதற்குள் மர்ம நபர் அங்கிருந்து தப்பி சென்றார். இந்த கொள்ளை சம்பவம் குறித்து புதுச்சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபரை வலைவீசி தேடி வந்தனர்.

தொடர்ந்து கடலூர் அருகே உள்ள ஆலப்பாக்கம் கம்பிழிமேடு பகுதியை சேர்ந்த கணபதி (30) என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணை கணபதி தனியார் இரும்பு ஆலையில் திருடியதை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் கணபதியை கைது செய்தனர். மேலும் அவனிடம் இருந்த கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Similar News