உள்ளூர் செய்திகள்
ரேசன் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டம்

ரேசன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டு-புழுக்கள்

Published On 2022-01-27 15:43 IST   |   Update On 2022-01-27 15:43:00 IST
ஒதவந்தான்குடி கிராமத்தில் உள்ள ரேசன் கடையில் வழங்கப்பட்ட அரிசியில் வண்டு-புழுக்கள் இருந்ததால் அரிசியை சாலையில் கொட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த ஓதவந்தான்குடி கிராமத்தில் ரேசன் கடை இயங்கி வருகிறது. இக்கடையின் மூலம் கிராமத்தைச் சேர்ந்த 450-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அரசின் குடிமை பொருட்களை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில் இந்த மாதத்திற்கான குடிமை பொருட்கள் வழங்கப்பட்டது.அப்பொழுது சிலருக்கு வழங்கப்பட்ட அரிசியில் வண்டுகள், புழுக்கள் நெளிந்து கொண்டிருந்தன. 


இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் அரிசியை சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து அவர்கள் கூறும்போது:-

கடந்த சில மாதங்களாகவே தங்களுக்கு வண்டுகள் வைத்த அரிசியை வழங்கப்படுவதாகவும் இதனை சமைத்து உண்பதற்கு பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதால் நீர்நிலைகளில் கொட்டியும் கால்நடைகளுக்கு உணவாகவும் கொடுக்கிறோம்.

அனைவருமே விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்பதால் ரேசன் கடை அரிசியையே நம்பி உள்ளோம். தொடர்ந்து தரமற்ற அரிசி வழங்கப்படுவதால் தங்களால் ஒரு வேளை உணவைக் கூட நிம்மதியாக சாப்பிட முடியாத அவல நிலை உள்ளது. 

எனவே வரும் காலங்களிலாவது தரமான அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News