உள்ளூர் செய்திகள்
போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காட்சி.

போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட பா.ஜனதாவினர்

Published On 2022-01-27 06:20 GMT   |   Update On 2022-01-27 06:20 GMT
அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி:

டெல்லியில் நடந்த குடியரசு தினவிழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி தடை செய்யப்பட்டதை கண்டித்து பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் அரியாங்குப்பம் பிரம்மன் சதுக்கம் அருகே 26-ந் தேதி கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென பிரதமர் மோடி உருவபடத்தை தீயிட்டு எரித்தனர்.

இந்தநிலையில் பிரதமர் மோடி உருவபொம்மையை எரித்ததுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இதனை தடுக்காத அரியாரிங்குப்பம் போலீசாரை கண்டித்தும் பா.ஜனதாவினர் 27-ந் தேதி  அரியாங்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

பிரதமர் மோடியின் உருவ பொம்மையை எரித்தவர்களை தேச துரோக வழக்கில் கைது செய்யவேண்டும் என கோஷமிட்டனர். 

இந்த முற்றுகை போராட்டத்தில் மாநில துணைத்தலைவர்கள் முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவிக்ரமன், செல்வம், பொதுச்செயலாளர் மோகன்குமார், செயலாளர் அகிலன், வக்கீல் பிரிவு தலைவர் கார்த்திகேயன், அரியாங்குப்பம் மாவட்ட தலைவர் தெய்வசிகாமணி, கூட்டுறவு பிரிவு தலைவர் வெற்றிசெல்வன் உள்பட 50&க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அரியாங்குப்பம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். மோடி உருவபொம்மையை எரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். 

இதனையேற்று பா.ஜனதாவினர் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். போலீஸ் நிலையத்தை பா.ஜனதாவினர் திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

இதற்கிடையே மோடி உருவபொம்மையை தீவைத்து எரித்த பெரியார் சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா உள்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Tags:    

Similar News