உள்ளூர் செய்திகள்
கைது

பண்ருட்டி பல்பொருள் அங்காடியில் சினிமா பாணியில் பணம் அபேஸ் செய்த ஆசாமி கைது

Published On 2022-01-26 16:22 IST   |   Update On 2022-01-26 16:22:00 IST
பண்ருட்டி பல்பொருள் அங்காடியில் சினிமா பாணியில் பணத்தை கொள்ளையடித்த ஆசாமியை மோசடி நடந்த 12 மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.
பண்ருட்டி:

பண்ருட்டி சோமேஸ்வரன் கோவில் தெருவில் பானு கோபன் என்பவரது சூப்பர் மார்க்கெட்டில் டிப்டாப் ஆசாமி ஒருவர் சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் அதிகம் பொருள் வாங்க போவதாக கடை ஊழியரிடம் ரூ.2000 அபேஸ் செய்தார்.

இதுபற்றி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் உத்தரவின்பேரில் பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

இதில் கிடைத்த காட்சிகளை பதிவு செய்து 4 பக்கமும் தனிப்படை போலீசாரை அனுப்பி விசாரணை வேகப்படுத்தினார். பல்வேறு கோணத்தில் விசாரணை வேகமாக நடைபெற்றது. விசாரணையில் இந்த பலே ஆசாமி சிதம்பரத்தை சேர்ந்தவன் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

உடனே தனிப்படை போலீசார் சிதம்பரம் விரைந்தனர். அங்கு இதேபோன்ற சம்பவத்தை வேறு ஒரு இடத்தில் அரக்கேற்ற தயாராகி கொண்டு இருந்தபோது பலே ஆசாமி சிக்கினான். அவனை மடக்கி பிடித்து நடத்திய விசாரணையில் பண்ருட்டியில் மோசடி செய்ததை ஒப்புக்கொண்டான்.

இவனது பெயர் சரவணன் என்பதும், சிதம்பரம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவன் என்பதும் தெரியவந்தது. அவனை பண்ருட்டிக்கு போலீசார் அழைத்து வந்தனர். பின்னர் போலீசார் கைது செய்து அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சிறிய மோசடி சம்பவம் தானே என்று அலட்சியமாக இல்லாமல் ஒட்டுமொத்த காவல் துறையே உஷாராகி மோசடி நடந்த 12 மணி நேரத்திற்குள் கைது செய்த காவல் துறையை ஒட்டுமொத்த பண்ருட்டி நகரமே பாராட்டுகிறது.

Similar News