உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை விமான நிலையத்தில் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Published On 2022-01-26 10:20 IST   |   Update On 2022-01-26 10:20:00 IST
துபாயில் இருந்து சரக்கு விமானம் மூலம் சென்னை விமான நிலையத்துக்கு கடத்தி வந்த ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
ஆலந்தூர்:

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு சரக்கப் பிரிவு விமான நிலையத்திற்கு ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து பெருமளவு கடத்தல் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பன்னாட்டு சரக்ககப் பிரிவு அலுவலகத்திற்கு வந்தனா். இதையடுத்து சென்னைக்கு துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து சரக்கு விமானம் மூலம் சரக்கு பெட்டகங்களை கண்காணித்தனர்.

இந்த நிலையில் துபாயில் இருந்து வந்த பார்சல்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை முகவரிக்கு வந்திருந்த ஒரு பார்சல் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பார்சலில் எந்திரங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனாலும் சந்தேகத்தின் பேரில் அந்த பார்சலில் இருந்த செல்போன் எண்ணில் அதிகாரிகள் தொடர்பு கொண்டனர். அந்த எண் உபயோகத்தில் இல்லை என தெரியவந்தது. அந்த பார்சலில் இருந்த முகவரியும் போலியானது என்று தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் அந்த பார்சலை திறந்து பார்த்தனர். அதில் புத்தம் புதிய தங்க கட்டிகள் இருந்ததை கண்டுபிடித்தனர். சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள 12 கிலோ தங்க கட்டிகள் இருப்பதை அறிந்து அவற்றை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னையில் உள்ள அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். இது தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Similar News