உள்ளூர் செய்திகள்
கைது

லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய டிரைவர் கைது

Update: 2022-01-25 10:43 GMT
விருத்தாசலம் அருகே லாரியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திய டிரைவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
விருத்தாசலம்:

கடலூர் மாவட்ட குற்றத்தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெரால்டு தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் மெயின் ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக 2 லாரிகளில் அரிசி மூட்டைகளை ஏற்றி வந்த டிரைவர்கள் போலீசாரை பார்த்ததும், சற்று முன்னதாகவே லாரிகளை நிறுத்திவிட்டு, இறங்கி ஓட்டம் பிடித்தனர்.

இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரிகளில் இருந்த மூட்டைகளை சோதனையிட்டபோது, 2 லாரிகளிலும் 399 மூட்டைகளில் மொத்தம் 20 டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, லாரிகளில் இருந்த ஆவணங்களை போலீசார் பார்த்தபோது, அந்த ரேஷன் அரிசி மூட்டைகள் ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்ல முயன்றபோது சிக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் அதனை கடத்த பயன்படுத்தப்பட்ட 2 லாரிகளையும் பறிமுதல் செய்து கடலூர் மாவட்ட குடிமைப்பொருள் குற்ற புலனாய்வு பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து விருத்தாசலம் கூட்டுறவு பதிவாளர் சுப்பிரமணியன் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவர்களை வலைவீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக உளுந்தூர்பேட்டை ஆண்டிக்குழியை சேர்ந்த அப்பாசாமி மகன் லாரி டிரைவர் மணிகண்டன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய விருத்தாசலம் புதுக்கூரைப்பேட்டை இளையபெருமாள், அவரது மகனும், லாரி உரிமையாளருமான மணிகண்டன், மற்றொரு லாரி டிரைவர் ராஜா ஆகிய 3 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News