உள்ளூர் செய்திகள்
உயிரிழந்த சுதா

குழந்தை பிரசவித்த 3-வது நாளில் பெண் சாவு உறவினர்கள் போராட்டத்தால் பரபரப்பு

Published On 2022-01-24 04:19 GMT   |   Update On 2022-01-24 04:19 GMT
குழந்தை பெற்றெடுத்த சில தினங்களில் பெண் உயிரிழந்ததால், உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஆண்டிமடம் அருகே திருக்களப்பூர், முத்து விநாயகர் குப்பம், பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது 39/ இவர் சென்னை தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சுதா (31). இவர்களுக்கு 5 வயதில் ரித்தீஷ் என்ற ஒரு மகன் உள்ளார். இதனிடையே சுதா இரண்டாவதாக கருவுற்றிருந்தார்.

அவர் 2-வது பிரசவத்திற்காக ஜெயங்கொண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கடந்த 19-ந் தேதி அனுமதிக்கப்பட்டார். சுதாவிற்கு 20&ந் தேதி அறுவை சிகிச்சை மூலம் பெண் குழந்தை பிறந்தது. மேலும், குழந்தை பெற்றெடுத்த அன்றே கணவர் ராஜாவின் அனுமதியுடன் சுதாவிற்கு கருத்தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் தாயும் குழந்தையும் நலமுடன் இருந்த நிலையில், நேற்று திடீரென சுதாவிற்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் டாக்டரை அழைத்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் மருத்துவர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு போராடிய சுதா, டாக்டர்கள் வராததால், பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த சுதாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார்,  சுதாவின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை  நடத்தினர். மருத்துவமனை தரப்பில் உரிய காரணம் தெரிவிக்கவில்லை என்றால் சுதாவின் உடலை வாங்கமாட்டோம் என உறவினர்கள் போராடினர்.

சுதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், டாக்டர்களும், செவிலியர்களும் சிகிச்சை அளித்தும்  சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாகவும் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்ட உறவினர்கள் உயிரிழந்த சுதாவின் உடலை பெற்று அடக்கம் செய்ய சொந்த ஊருக்கு கொண்டு சென்றனர்.

குழந்தை பெற்றெடுத்த 3 நாட்களில் பெண் உயிரி£ந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News