உள்ளூர் செய்திகள்
கோவிலின் முன்பு நடைபெற்ற திருமணம்

திருவந்திபுரத்தில் நடந்த 80 திருமணங்கள்

Published On 2022-01-23 09:36 GMT   |   Update On 2022-01-23 09:36 GMT
கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன.

கடலூர்:

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் அசுரவேகத்தில் அதிகரித்து வரும் நிலையில் நேற்று வரை கடலூர் மாவட்டத்தில் 587 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

முழு ஊரடங்கு நாளில் 50 பேர்களை கொண்டு திருமணம் நடத்தி கொள்ளலாம் என்று தமிழக அரசு ஏற்கனவே அனுமதி அளித்து இருந்தது. இதன் காரணமாக கடந்த மாதம் மார்கழி மாதம் என்பதால் சுபநிகழ்ச்சிகள் மற்றும் திருமணங்கள் நடைபெறாமல் இருந்து வந்தன.

தை மாதம் தொடங்கி இன்று முகூர்த்த நாள் என்பதால் கடலூர் மாவட்டத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெற்று வந்தன.

கடலூர் அருகே திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் முன்பு 40-க்கும் மேற்பட்ட திருமணங்கள் அதிகாலை முதல் நடைபெற்று வந்தன. மேலும் திருவந்திபுரம் சுற்றியுள்ள தனியார் திருமண மண்டபங்களில் 40 -க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய தினங்களில் கோவில்கள் மூடப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டு இருந்ததால் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் மூடப்பட்டு கோவில் முகப்பு பகுதிகளில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் மணமக்கள் ஜோடியாக கோவில் முன்பு தங்கள் உறவினர்களுடன் திரண்டு வந்தனர். பின்னர் சாலையில் திருமணம் நடைபெற்றது. அப்போது அந்தப் பகுதியில் ஏராளமான மக்கள் சமூக இடைவெளி இல்லாமல் முகக் கவசம் அணியாமல் திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலையில் நடைபெறும் திருமணத்தின் போது அவர்கள் உறவினர்கள், பெற்றோர்கள் என 10 பேர் மட்டுமே இருக்க வேண்டும்.

மேலும் ஒரு திருமணம் நடந்த பிறகு மற்றொரு திருமணம் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து நடைபெற வேண்டும் என கடும் எச்சரிக்கை செய்தனர். இதனை தொடர்ந்து தனியார் திருமண மண்டபங்களில் அரசு அறிவித்த 50 பேர் மட்டுமே திருமணம் விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என ஒலிபெருக்கி மூலம் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து சமூக இடைவெளியை பின்பற்றி இருக்கவேண்டுமென அறிவுறுத்தினர்.

இன்று முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்ட காரணத்தினால் திருவந்திபுரம் பகுதியில் திறந்திருந்த அனைத்து கடைகளிலும் மூட வேண்டும் என போலீசார் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து போலீசார் எச்சரிக்கையால் திறந்திருந்த கடைகள் முழுவதும் மூடப்பட்டன.

மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்கவும் கூட்டம் அதிகளவில் சேராமல் இருக்கவும் போலீசார் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். மேலும் முக கவசம் அணியாத 15 பேருக்கு அபராதம் விதித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக திருவந்திபுரம் பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

Tags:    

Similar News