உள்ளூர் செய்திகள்
கைது செய்யப்பட்ட ரவுடி பொடிமாஸ் என்ற சரத்

எதிராளிகளை கொல்ல பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பல் கைது

Published On 2022-01-22 11:55 IST   |   Update On 2022-01-22 11:55:00 IST
எதிராளிகளை கொல்ல பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை கருவடிக்குப்பம் சண்முகாநகர் பாய்தோப்பில்  ஒரு கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருப்பதாக லாஸ் பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. 

இதையடுத்து சப்&இன்ஸ்பெக்டர் திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். 

அப்போது அங்கு பதுங்கியிருந்த கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றனர். ஆனால் போலீசார் அந்த கும்பலை சேர்ந்த அனைவரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் 4 வீச்சரிவாள்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தும் வெடி பொருள், திரி, நூல்கண்டு போன்றவற்றை வைத்திருந்தனர். 

இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்து பிடிப்பட்ட கும்பலிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கருவடிக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ரவுடியான பொடிமாஸ் என்ற சரத்(வயது28), செல்லப்பெருமாள் பேட் ஊத்துக்காட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்த வினோத்(27) மற்றும் மாறன் என்ற லோகபிரசாந்த்(20),  பாலு என்ற பாலசந்தர், லாஸ்பேட்டை நாவலர் நகரை சேர்ந்தவர் ராஜேஷ்(29), கருவடிக்குப்பம் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்த தர்மா என்ற தர்மசிவம்(23) என்பது தெரியவந்தது.

 விசாரணையில் இவர்கள் எதிராளிகளை வெடிகுண்டு தயாரித்து கொலை செய்ய வீச்சரிவாள்களுடன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட ரவுடி பொடிமாஸ் என்ற சரத் மற்றும் வினோத் ஆகியோர் மீது ஏற்கனவே கொலை வழக்கு, கொலை முயற்சி வழக்கு மற்றும் வெடிகுண்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News