உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை
புதுவை கதிர்காமத்தில் கல்லூரி மாணவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகரில் வாடகை வீட்டில் வசித்து வருபவர் புனிதவேல். இவர் புதுவையில் உள்ள தனியார் மதுக்கடையில் கேஷியராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மல்லிகா. தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் மகேஷ் பூபதி (வயது19). இவர் பி.எஸ்.சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
கடந்த 19-ந் தேதி புனிதவேல் குடும்பத்துடன் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்றார். 21- ந் தேதி அனைவரும் வீடு திரும்பினர். அப்போது தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக மகேஷ்பூபதி கூறியதால் அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லுமாறு புனிதவேல் தனது மனைவி மல்லிகாவிடம் கூறிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
அதன்படி மகேஷ்பூபதியை தனியார் ஆஸ்பத்திரிக்கு மல்லிகா அழைத்து சென்று சிகிச்சை அளித்த பின்னர் மகனை வீட்டில் ஓய்வு எடுக்குமாறு கூறி விட்டு மல்லிகா வேலைக்கு சென்றார். மகேஷ்பூபதியுடன் அவரது தங்கை ராஜேஸ்வரி வீட்டில் இருந்தார்.
இந்த நிலையில் மாலை 5 மணியளவில் மகேஷ்பூபதி திடீரென வீட்டில் தூக்குபோட்டு தொங்கினார். இதனை பார்த்த அவரது தங்கை ராஜேஸ்வரி உடனே தனது தந்தை புனிதவேலுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து புனிதவேல் வீட்டுக்கு விரைந்து வந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகேஷ்பூபதியை தூக்கில் இருந்து மீட்டு கதிர் காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மகேஷ்பூபதி இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்டதால் வேதனையடைந்த மகேஷ்பூபதி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து அவரது தந்தை புனிதவேல் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் புதுவை சாரம் தென்றல் நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி சுமதி (வயது40). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நோய் கொடுமை அதிகமானதால் சுமதி தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். அப்போது வீட்டில் இருந்த தனது மகன் மோகனை கடைக்கு சென்று காய்கறி வாங்கி தருமாறு அனுப்பிவிட்டு படுக்கை அறையில் மின்விசிறியில் சேலையால் தூக்குபோட்டு தொங்கினார்.
பின்னர் காய்கறி வாங்கிகொண்டு மோகன் வீட்டுக்கு வந்த போது அங்கு தாய் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உறவினர்களை வரவழைத்து தனது தாயை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுமதி 21&ந் தேதி காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனார்.
இதுகுறித்து அவரது மகன் மோகன் கொடுத்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.