உள்ளூர் செய்திகள்
அரிசி வாங்க வந்த பொதுமக்கள்

சீர்காழி பகுதியில் ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்கல்

Published On 2022-01-20 08:54 GMT   |   Update On 2022-01-20 08:54 GMT
சீர்காழி பகுதியில் ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்கியதை வாங்க மறுத்து மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சீர்காழி:

சீர்காழி பகுதி ரேசன் கடையில் தரமற்ற அரிசி வழங்குவதை 
கண்டித்து புதன்கிழமை கடைக்கு அரிசி கொண்டுவந்த லாரியை 
மடக்கி தரமான அரிசி வழங்கவேண்டும் என கோரியும், தரமற்ற 
அரிசியை வாங்கமறுத்தும் பொதுமக்கள் கடையின் முன்பு திரண்டு முழக்கங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி பகுதியில் உள்ள ரேசன் கடைகளில் கடந்த சில மாதங்களாக 
குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசி தரமற்று இருப்பதாக பொதுமக்கள் கூறி வருகின்றனர்.

இதனை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட், விவசாய தொழிலாளர் 
சங்கத்தினர் தரமற்ற அரிசியை சாலையில் கொட்டி பல்வேறு 
நூதன போராட்டங்களை நடத்தியும், எதிர்ப்பு தெரிவித்தும் 
கோரிக்கை விடுத்தும் வருகின்றனர்.

இதனிடையே சீர்காழி நகராட்சி 3-வது வார்டுக்கு உட்பட்ட பகுதி மக்களுக்கான எம்.எஸ்.கே. நகரில் உள்ள ரேசன் கடையில் 
குடும்ப அட்டைக்கு அரிசி வாங்க பொதுமக்கள் பலர் வந்திருந்தனர்.
அப்போது தரமற்ற அரிசி வினியோகம் செய்யப்பட்டது.

இதனை பார்த்து அதிருப்தியடைந்த 20-க்கும் மேற்பட்ட பொதுமக்கள 
தரமற்ற அரிசியை வாங்க மறுத்து விற்பனையாளர்களிடம் 
வாக்குவாதம் செய்தனர்.

அப்போது எருக்கூர் நவீன அரிசி ஆலையிலிருந்து, ரேசன்கடைக்கு 
அரிசி மூட்டைகள் வந்து இறங்கின. 

அதனை பார்த்த பொதுமக்கள் தரமான அரிசியை வழங்கவேண்டும், 
தரமற்ற அரிசியை திருப்பி எடுத்து செல்லவேண்டும் என லாரி முன்பு 
நின்று கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.

இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.தொடர்ந்து வரும் நாட்களில் 
தரமான அரிசி குடும்ப அட்டைதார்களுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து பொதுமக்கள் 
அரிசி வாங்காமல் கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News