உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

வேலூர் ஒரு வாரத்தில் காவிரி குடிநீர் விநியோகம் தொடங்கும்

Published On 2022-01-19 10:02 GMT   |   Update On 2022-01-19 10:02 GMT
வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரு வாரத்தில் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வேலூர் மாநகராட்சியுடன் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் சுமார் 900-க்கும் மேற்பட்ட வழியோர கிராமப்புறங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் நடைமுறைக்கு வந்த பிறகு ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பெரிய அளவில் குடிநீர் பிரச்சினைகள் ஏற்படவில்லை.

இதற்கிடையில், தமிழ கத்தில் கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்த வடகிழக்கு பருவமழையால் பாலாறு மற்றும் அதன் துணை ஆறுகளில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

பாலாற்றில் சுமார் 163 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் பச்சக்குப்பம், மாதனூர், விரிஞ்சிபுரம், பொய்கை, பள்ளிகொண்டா உள்ளிட்ட பகுதிகளில் பாலாற்றின் கரையோரத்தில் அமைக்கப் பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் பிரதான ராட்சத இரும்பு குழாய்கள் சேதமடைந்தன.

இதன் காரணமாக ஆம்பூருக்கு கீழ் பகுதியில் உள்ள வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் காவிரி கூட்டுக குடிநீர் திட்டம் நிறுத்தப்பட்டது.

மேலும், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளின் உள்ளூர் குடிநீராதாரங்களை பயன்படுத்த அறிவுறுத் தப்பட்டது. 

ஆனால், உள்ளாட்சி அமைப்புகளால் போதிய அளவுக்கு குடிநீர் விநியோகம் செய்ய முடியாத காரணத்தால் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட சில நகராட்சிகளில் குடிநீர் விநியோகத்தில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்களின் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்தாலும் போதவில்லை என்பதால் காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் சீரமைப்புப் பணியை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கடந்த ஒரு மாதமாக செய்து வருகின்றனர். 

இந்த பணியின் தற்போதைய நிலை குறித்து அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, ÔÔபாலாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் மாதனூர் பகுதியில் சுமார் 600 மீட்டர், பச்சக்குப்பம் பகுதியில் 15 மீட்டர், விரிஞ்சிபுரத்தில் 60 மீட்டர், பொய்கையில் 200 மீட்டர் அளவுக்கு குழாய்கள் சேமடைந்துள்ளன. 

அதே போல், பள்ளி கொண்டாவில் இருந்து குடியாத்தம் நகராட்சிக்கு செல்லும் பிரதான குழாய், வேலூர் விருதம்பட்டு பகுதியில் இருந்து காட்பாடி பகுதிக்குச் செல்லும் பிரதான குழாயும் சேதமடைந்துள்ளன.

பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு பிரதான குழாயில் குடிநீர் விநியோகம் தொடர்பான சோதனை ஓட்டம் நேற்று நடத்தினோம். இதில் பச்சக்குப்பம் பாலாற்றில் புதைக்கப்பட்ட குழாயில் சேதம் ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த குழாயை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளோம். 

அதேபோல், விருதம்பட்டு பகுதியில் ஏற்பட்டுள்ள குழாய் சேதமும் நேற்று தான் கண்டறியப்பட்டது. பிரதான குழாய் சீரமைப்புப் பணிகள் முடிந்துள்ளதால் அதிகபட்சம் ஒரு வாரத்தில் வேலூருக்கு காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் தொடங்கும் என்றனர்.
Tags:    

Similar News