உள்ளூர் செய்திகள்
பாகூரில் உள்ள பைபாஸ் சாலையில் மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து கிடக்கும் காட்சி.

இருளில் மூழ்கிய பாகூர் பைபாஸ் சாலை- இரவு நேரத்தில் பாராக பயன்படுத்தும் மது பிரியர்கள்

Published On 2022-01-19 04:29 GMT   |   Update On 2022-01-19 04:29 GMT
பாகூர் பைபாஸ் சாலை இருளில் மூழ்கியதால் மதுபிரியர்கள் பாராக பயன்படுத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி: 

பாகூர் தற்போது நகரத்துக்கு நிகராக வளர்ந்து வருகிறது. பாகூர் பகுதியில் தாலுகா அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகம், அரசு பள்ளிக்கூடங்கள், கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை, வேளாண் துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருவதால் தினந்தோறும் பல பகுதிகளை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். 

இதனால் காலை முதல் மாலை வரை மார்க்கெட் வீதி முழுவதும் போக்குவரத்து நெரிசலாக காணப்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக பாகூர் தூக்கு பாலம் முதல் விநாயகர் கோவில் சந்திப்பு வரை பைபாஸ் சாலை அமைக்கப்பட்டது. பகல் நேரத்தில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்க பொதுமக்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இரவு நேரத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இதனைப் பயன்படுத்தி மதுபிரியர்கள் இந்த சாலையில் மது அருந்தி வருகின்றனர். 

மேலும் பாட்டில்களை உடைத்து வீசிவிட்டு செல்கின்றனர்‌. இதனால் இரவு நேரத்தில் இந்த சாலையை பொதுமக்கள் பயன்படுத்த அச்சப்பட்டு வருகின்றனர். மேலும் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து செல்லும்போது மதுபிரியர்களை அடித்து விரட்டி அனுப்பி விடுகின்றனர். போலீசார் சென்றதும் மீண்டும் சாலையில் அமர்ந்து மதுகுடித்து வருகின்றனர். இந்த பகுதியில் மது அருந்தக்கூடாது என்று போலீசார் எச்சரிக்கை பலகை வைத்தனர். அதையும் கிழித்து விட்டனர். 

இந்த சாலையில் மின் விளக்கை ஏற்படுத்தித்தர பொதுமக்கள் மற்றும் போலீசாரும் மின்துறைக்கு பல்வேறு முறை கோரிக்கை வைத்துள்ளனர். இதுவரை மின்துறை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.  எனவே, இந்த சாலையில் குற்றச் சம்பவங்கள், அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்கும் வகையில் உடனடியாக மின்விளக்கு, கண்காணிப்பு கேமரா ஏற்படுத்தித்தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
Tags:    

Similar News