உள்ளூர் செய்திகள்
தமிழிசை சவுந்தரராஜன்

மருத்துவம், செவிலியர் படிப்பிற்கு கடந்த ஆண்டு கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்- புதுச்சேரி கவர்னர் உத்தரவு

Update: 2022-01-19 03:12 GMT
புதுச்சேரியில் மருத்துவம், செவிலியர் படிப்புகளுக்கு கடந்த ஆண்டு கட்டணத்தையே இந்த ஆண்டும் வசூலிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:

புதுச்சேரி அரசு சார்பு செயலாளர் புனிதமேரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவை மாநிலத்தில் கவர்னர் பரிந்துரையின்படி சென்டாக் கலந்தாய்வு மூலம் 2021-22ம் கல்வி ஆண்டுக்கான மருத்துவம், பல் மருத்துவம், பி.பார்ம், செவிலியர் படிப்பிற்கு அரசு ஒதுக்கீட்டில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு கடந்த ஆண்டு வசூலிக்கப்பட்ட கல்வி கட்டணமே வசூலிக்க வேண்டும். இந்த கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை.

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

புதுவை மாநில மாணவர் பெற்றோர் சங்க தலைவர் வை. பாலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்று காலத்தில் கடந்த 2 ஆண்டுகளாக புதுச்சேரி மாநிலத்தில் வசிக்கும் அனைத்து மக்களும் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு புதுச்சேரி மாநில மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நடப்பு கல்வியாண்டில் மருத்துவம், பல் மருத்துவம், பி.பார்ம், செவிலியர் படிப்பிற்கு எந்தவித கல்விக்கட்டண உயர்வும் இல்லை என்று அறிவித்த கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோருக்கு புதுச்சேரி மாநில மாணவர், பெற்றோர் நலச்சங்கம் சார்பில் நன்றியையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

சுப்ரீம் கோர்ட்டு வழிகாட்டுதலின்படி மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்ட கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணங்களை காட்டிலும் ஒரு சில கல்லூரி நிர்வாகங்கள் கூடுதல் கட்டணம் பெறுகின்றன. இதன் மீது நடவடிக்கை எடுக்க மற்ற மாநிலங்களில் உள்ளதுபோல் புதுவை அரசும் கல்விக்கட்டண கண்காணிப்பு ஆணையத்தை அமைக்க வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News