உள்ளூர் செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

மாமல்லபுரத்தில் அரசு சுற்றுலா விடுதி ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா

Published On 2022-01-18 11:02 GMT   |   Update On 2022-01-18 11:02 GMT
கல்பாக்கம் அணுமின் நிலைய கேண்டீன் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
மாமல்லபுரம்:

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று ஒரே நாளில் 8 ஆயிரத்து 591 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.

சென்னைக்கு அடுத்த இடத்தில் நோய் தொற்று அதிகம் பரவும் இடமாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது.

நேற்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் தாம்பரம், பல்லாவரம், செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களில் நோய் தொற்று அதிகமாக காணப்படுகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் உள்ள அரசு சுற்றுலா விடுதியில் ஊழியர்கள் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பது சுற்றுலா பயணிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு சுற்றுலா விடுதி உள்ளது. இங்கு 78 ஊழியர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். கடந்த சில நாட்களாக இங்குள்ள ஊழியர்கள் சிலருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டது.

இதையடுத்து ஊழியர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 12 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர்களை சுகாதார ஊழியர்கள் தனிமைப்படுத்தி உள்ளனர்.

இந்த நிலையல் கல்பாக்கம் அணுமின் நிலைய கேண்டீனிலும் சிலருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து கேண்டீன் ஊழியர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இதன் முடிவு வந்த பின்னரே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் தெரிய வரும். மேலும் அணுமின் நிலைய அனைத்துத்துறை ஊழியர்களும் வரும் 31-ந் தேதி கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என பொதுப்பணி சேவைகள் நிர்வாகம் அணுமின் நிலைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News