உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

போலீஸ் தேர்வில் யாருடைய குறுக்கீடும் இருக்காது- அமைச்சர் நமச்சிவாயம் உறுதி

Published On 2022-01-18 15:40 IST   |   Update On 2022-01-18 15:40:00 IST
புதுவையில் நடைபெறும் போலீஸ் தேர்வில் யாருடைய குறுக்கீடும் இருக்காது என அமைச்சர் நமச்சிவாயம் உறுதி அளித்தார்.
புதுச்சேரி:

புதுவை காவல்துறையில் காலியாக உள்ள 390 போலீசார், 12 ரேடியோ டெக்னீஷியன் உள்ளிட்ட  காலி  பணியிடங்கள் நிரப் பப்பட உள்ளது.

இந்த பணிகளுக்காக விண்ணபித்தவர்களில் 14 ஆயிரத்து 787 பேர் தகுதி உடையவர்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்களுக்கான உடல் தகுதி தேர்வு  19-ந்தேதி கோரிமேடு போலீஸ் மைதானத்தில் தொடங்குகிறது. 

எவ்வித தவறுகளுக்கும் இடமளிக்காமல்  நேர்மை யாக நடைபெறும் வகை யில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்ட பட்டை அணிந்து ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட உடல் தகுதிகள் துல்லியமாக கணக்கிடப்பட உள்ளது. 

தேர்வுக்கு வருவோருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு வருவோர் செல்போன் எடுத்து வர அனுமதி கிடையாது.  தேர்வில் ஈடுபடும் போலீசாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது. மீறி வைத்திருந்தால் அவர்கள் சஸ்பெண்டு செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

தேர்வில் ஈடுபடும் போலீசாரின் உறவினர்கள் தேர்வில் பங்கேற்றால், அவர்களை மாற்றுப்பணிக்கு அனுப்பவும் உத்தரவிடப் பட்டுள்ளது. தேர்வு நடத்தும் அதிகாரிகளை சுழற்சி அடிப்படையில் பணிகள் மாற்றி வழங்கப்பட உள்ளது. 

தேர்வுக்கு வருவோர் கொரோனா இல்லை என சான்றிதழ் அளிக்க வேண்டும். இவர்கள் எளிதாக சான்றிதழ் பெறும் வகையில் சிறப்பு ஏற்பாடுகளும் செய் யப்பட்டுள்ளது. ஒருவேளை பரிசோதனை யில் கொரோனா தொற்று இருந்தால் வேறு தேதியில் உடல் தகுதி தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர்.

இதற்கிடையே உடல் தகுதி தேர்வை நேர்மையாக நடத்த அனைத்து முயற்சிகளையும் எடுத்திருப்பதாக உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறியதாவது:- 
யாருடைய குறுக்கீடும் இருக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டு உள்ளது. அதிகாரிகள் மீது புகார்களோ, குற்றச்சாட்டுகளோ எழுந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.  அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக தெரியவந்தால், துறைரீதியிலான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். பணம் கொடுத்தால் போலீஸ் வேலை வாங்கித் தருவதாக கூறுபவர்களிடம் யாரும் ஏமாற வேண்டாம். 

இவ்வாறு நமச்சிவாயம் தெரிவித்தார்.

Similar News