உள்ளூர் செய்திகள்
கைது

ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை, பணம் திருட முயன்ற 2 பெண்கள் கைது

Published On 2022-01-18 05:40 GMT   |   Update On 2022-01-18 05:40 GMT
மத்தூரில் ஓடும் பஸ்சில் போலீஸ்காரர் மனைவியிடம் நகை மற்றும் பணத்தை திருட முயன்ற 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் ஒருவரின் மனைவி நேற்று மாலை தருமபுரியில் இருந்து மத்தூர் செல்லும் தனியார் பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவரது கையில் ஒரு பையை வைத்திருந்தார். அதில் 7 பவுன் நகையும், ரூ.30 ஆயிரம் பணமும் வைத்திருந்தார்.

பஸ்சில் அவர் அருகே 2 பெண்கள் நின்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்கள் 2 பேரும், நைசாக போலீஸ்காரர் மனைவியிடம் பேச்சு கொடுத்தனர். பையை கையில் வைத்துகொண்டு எதற்கு சிரமப்பட்டு கொண்டிருக்கிறீர்கள். எங்களிடம் கொடுங்கள் என்றனர். இதை நம்பிய அவரும், பையை அந்த 2 பெண்களிடம் கொடுத்தார்.

இந்த நிலையில் பஸ்சில் கூட்டநெரிசலை பயன்படுத்தி, 2 பெண்களும் பையை திறந்து நகை- பணத்தை திருட முயன்றனர். இதை கவனித்த போலீஸ்காரர் மனைவி கூச்சல் போட்டார்.

உடனே சக பயணிகள், அந்த 2 பெண்களையும் தப்ப விடாமல் பிடித்து விட்டனர். பின்னர் அவர்களை மத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். இதில் அவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே கட்டமடவு பகுதியை சேர்ந்த குரு என்பவரின் மனைவி காயத்ரி (வயது 22) எனவும், அதே போல் திருவண்ணாமலை மாவட்டம், அவலூர்பேட்டை பகுதியை சேர்ந்த மணி என்பவர் மனைவி பிரியா (34) எனவும் தெரிய வந்தது.

இவர்கள் இருவரும் பல்வேறு பகுதிகளில் பண்டிகை மற்றும் திருவிழாக்களில் கூட்டமான இடங்களுக்கு சென்றும் நோட்டமிட்டு பெண்களிடம் நகை, பணத்தை திருடி வந்துள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன், 2 பெண்கள் மீதும் வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.
Tags:    

Similar News