உள்ளூர் செய்திகள்
நாட்டுக் கோழி வளர்ப்பு பயிற்சி நடந்தது

விவசாயிகளுக்கு நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி

Published On 2022-01-17 09:57 GMT   |   Update On 2022-01-17 09:57 GMT
திருவாரூர் அருகே கமுகக்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் புறக்கடையில் கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சி நடைபெற்றது.
திருவாரூர்:

திருவாரூர் அருகே கமுகக்குடி கிராமத்தில் விவசாயிகளுக்கு 
வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் புறக்கடையில் 
கோழி வளர்ப்பு பற்றிய பயிற்சி நடைபெற்றது. 

பயிற்சிக்கு நிலைய கால்நடை மருத்துவர் சபாபதி தலைமை வகித்தார். தொழில்நுட்ப உதவியாளர் ரேகா உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில், நாட்டுக்கோழி வளர்ப்பது ஒரு லாபகரமான தொழிலாக மாறிவிட்டது. குஞ்சுகளை வாங்கி விற்பது, தீவனங்களை வாங்கி 
கொடுப்பது, கோழிகளுக்கு தடுப்பூசி பணி மேற்கொள்வது, 
கோழிகளுக்கு மூலிகை கலவை தயார் செய்து விற்பது. 

கோழி வளர்க்க கொட்டகை அமைப்பது, எளிய தீவனம் தயாரித்து 
விற்பது மற்றும் வளர்ந்த கோழிகளை வாங்கி விற்பது என பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.

நாட்டுக்கோழிகளுக்கு முதல் 5 வாரங்களில் கழிச்சல் மற்றும் கோழி 
அம்மை தடுப்பூசிகளை போட வேண்டும். இளம் குஞ்சுகளில் எலிகளின் தாக்குதல், வளர்ந்த கோழிகளை நாய், காட்டு பூனை மற்றும் 
கீரிப்பிள்ளை தாக்குதல் போன்றவைகளில் இருந்து காப்பது 
குறித்து விளக்கப் பட்டது. 

தற்பொழுது நாட்டுக்கோழிகளை செயற்கை அடைக்காப்பான் 
மூலம் எளிதில் உற்பத்தி செய்து விற்கப்படுகிறது.

ஆனால் அவை முறைப்படியே தடுப்பூசி செய்து விற்கப்படுகிறதா என்பது உறுதி செய்ய இயலாத நிலை உள்ளதால் நம்பகமான இடத்தில் நாட்டுக்கோழி குஞ்சுகளை வாங்க வேண்டும் அல்லது வாங்கிய நாட்டுக்கோழிகளை முதல் 3 நாட்களுக்குள் மாரீக்ஸ் தடுப்பூசி செய்து கொள்ள வேண்டும்.

நாட்டுக்கோழிகளுக்கு மற்றும் நாட்டு கோழி முட்டைகளுக்கு சந்தையில் நல்ல கிராக்கி உள்ளது. வரும் காலங்களில் நாட்டுக் கோழி முட்டை மற்றும் நாட்டுக்கோழி இறைச்சிகளை சமைக்க தேவைப்படும். 

மசாலா கலவை மற்றும் மூலப்பொருட்கள் தயார் செய்து விற்பது 
ஒரு பெரிய தொழிலாக வந்துவிடும். மேலும் நல்ல நாட்டுக் கோழி 
இறைச்சி மற்றும் முட்டைகளை உண்பது குடும்பத்திற்கு நல்ல ஊட்டச்சத்தினை நல்கும் என பயிற்சியில் தெரிவிக்கப்பட்டது.

பயிற்சியில் அனுபவ விவசாயி மாதவன் நாட்டுக் கோழி 
சந்தைப்படுத்துதல் மற்றும் சந்தை கிராக்கி பற்றி கூறினார். 
பயிற்சியில் முன்னோடி விவசாயிகள் பக்கிரிசாமி, மாதவன் 
உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News