உள்ளூர் செய்திகள்
தினசரி பரிசோதனை எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஆக அதிகரிப்பு
சேலத்தில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 4 ஆயிரத்து 500 ஆக அதிகரித்துள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கொரோனா 3-ம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கெள்ளப்பட்டு வருகிறது.
அடுத்த மாதம் 2-ம் வாரம் கொரோனா உச்சத்தை தொடும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்து உள்ளதால் வெளிநாட்டில் இருந்து வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி முதல் ஜனவரி 14-ந் தேதி வரை வெளி நாடுகளில் இருந்து ஊர் திரும்பிய 540 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களில் 400 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர்.
மேலும் கொரோனா சமூக பரவலாகி வருவதால் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி பரிசோதனை எண்ணிக்கை 3 ஆயிரத்தில் இருந்து படிப்படியாக அதிகரித்து தற்போது 4 ஆயிரத்து 500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சேலம் தொங்கும் பூங்காவில் கொரோனா தற்காலிக சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் 32 மையங்கள் மாவட்டம் முழுவதும் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அங்கு கொரோனா அறிகுறி மற்றும் லோசான பாதிப்புக்குள்ளானோர் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படும். நோய் வீரியம் அதிகம் காணப்படுவோர், அரசு மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட உள்ளனர்.