உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

வில்லியனூரில் பெட்ரோல் ‘பங்க்’ ஊழியரின் மோட்டார் சைக்கிள் பறிப்பு

Published On 2022-01-17 10:47 IST   |   Update On 2022-01-17 10:47:00 IST
வில்லியனூரில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் தப்பி சென்றவர்களை விரட்டி சென்ற ‘பங்க்’ ஊழியரின் மோட்டார் சைக்கிள் மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.
புதுச்சேரி:

வில்லியனூர் சுல்தான்பேட்டையில் கூட்டுறவு துறைக்கு   சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. அங்கு சண்முகாபுரம் அண்ணா வீதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 31) ஊழியராக பணி புரிந்து வருகிறார். இந்த பெட்ரோல் பங்குக்கு 2 மோட்டார்  சைக்கிள்களில் 3 பேர் வந்தனர். அவர்கள் மோட்டார் சைக்கிள்களுக்கு பெட்ரோல் நிரப்புமாறு ராஜ்குமாரிடம் கூறினர். 

ராஜ்குமாரும் 2 மோட்டார் சைக்கிள்களுக்கும் பெட்ரோல்   நிரப்பினார். ஆனால், திடீரென அவர்கள் பணம் தராமல் அங்கிருந்து சென்றனர்.  இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜ்குமார் பணம் தராமல் சென்றவர்களை மோட்டார் சைக்கிளில் விரட்டி சென்றார்.வில்லியனூர் நோக்கி  3 கிலோ மீட்டர்  தூரம் விரட்டிச் சென்ற ராஜ்குமார்  வில்லியனூர் கண்ணகி மேல்நிலைப்பள்ளி அருகே சென்றபோது அவர்களை  தடுத்து நிறுத்தினார்.

அப்போது அவர்கள் ராஜ்குமாரை தாக்கிவிட்டு அவரது மோட்டார் சைக்கிளையும் பறித்து கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸ் சப்--இன்ஸ்பெக்டர் ராஜன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

மேலும் பெட்ரோல் பங்கில் பொருத்தப்பட்டு   இருந்த சி.சி.டி.வி. கேமரா மூலம் ஆய்வு செய்து மோட்டார் சைக்கிளை பறித்து சென்ற வாலிபர்களை தேடிவருகிறார்கள்.

Similar News