உள்ளூர் செய்திகள்
தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரியில் அதிக ஆர்வம்

ஓராண்டு நிறைவு- தமிழகத்தில் தடுப்பூசி செலுத்துவதில் நீலகிரியில் அதிக ஆர்வம்

Published On 2022-01-16 08:00 GMT   |   Update On 2022-01-16 08:00 GMT
தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபனமானதால் கடந்த நவம்பர் மாதம் வீடு வீடாக சென்று தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2020-ம் ஆண்டு தொடக்கத்திலேயே உலகம் முழுவதும் பரவி படாதபாடு படுத்தி விட்டது.

கொரோனா வைரசில் ஏற்பட்ட மரபணு உருமாற்றம் காரணமாக அது அடுத்தடுத்து காமா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமைக்ரான், டெல்டாக்ரான் என்று பல்வேறு வடிவங்கள் எடுத்து உள்ளது.

அடுத்து புளோரான்சா என்னும் புதிய வடிவில் கொரோனா பரவுவதாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் மேலும், மேலும் அடுத்தடுத்து புதிய வடிவங்கள் எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக நிபுணர்கள் கருதுகிறார்கள்.

ஒமைக்ரான் வைரஸ் பரவுவதால் டெல்டா வகை கொரோனா அழிந்து உலகில் கொரோனாவின் தாக்கம் எதிர்வரும் காலங்களில் இல்லாமல் போய்விடும் என்றும் நிபுணர்களில் ஒரு சாரார் கருதுகிறார்கள்.

பொதுவாக கொரோனா விசயத்தில் நிபுணர்களிடம் மாறுபட்ட கருத்துக்களே நிலவுகின்றன. அது உருமாறி துவம்சம் செய்யும்போதுதான் அதுபற்றி அடுத்தக்கட்ட தகவல்கள் தெரிகிறது.

கொரோனா பரவலை பொறுத்தவரை அதை கட்டுப்படுத்துவதற்கு இருக்கும் மிக முக்கியமான அம்சமாக தடுப்பூசி மட்டுமே உள்ளது. முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது போன்றவைகள் மூலமாகவும் கொரோனாவை தடுக்கலாம். என்றாலும், தடுப்பூசி மட்டுமே முக்கிய ஆயுதமாக உள்ளது.

உலகில் பல்வேறு வகையான கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் கோவிஷீல்டு, கோவேக்சின், ஸ்புட்னிக்-வி ஆகிய 3 வகை தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

மேலும் 2 தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. அவை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தநிலையில் தடுப்பூசி போடும் திட்டம் இந்தியாவில் இன்றுடன் ஓராண்டை நிறைவு செய்து உள்ளது.

இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 16-ந் தேதி தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. முதல் கட்டமாக நாடு முழுவதும் முன் களபணியாளர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1-ந் தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. அதே சமயத்தில் 45 வயது முதல் 60 வயது வரை இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டன.

ஏப்ரல் 1-ந் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் அமல்படுத்தப்பட்டன. இதன் மூலம் இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரம் அடைந்தன.

கடந்த மே மாதம் 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் கூடுதல் முகாம்கள் அமைத்து நாடுமுழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு உடனுக்குடன் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

முதலில் சில வாரங்களுக்கு தடுப்பூசி பெறுவதில் கட்டுப்பாடு நிலவியது. ஆனால் மத்திய அரசு தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க செய்து அதை கொள்முதல் செய்து மாநிலங்களுக்கு வினியோகித்தது. இதனால் தற்போது நாடுமுழுவதும் தட்டுப்பாடுஇல்லாமல் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

தடுப்பூசி முழுமையாக செலுத்தப்பட்டால்தான் கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்பது நிரூபனமானதால் கடந்த நவம்பர் மாதம் வீடு வீடாக சென்று தடுப்பூசி விழிப்புணர்வை ஏற்படுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் கணிசமானவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்தனர்.

மாநிலங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தும் திட்டமும் தீவிரப்படுத்தப்பட்டது. தமிழகத்தில் இதுவரை 18 தடவை சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளது. இந்த சிறப்பு முகாம்கள் மூலம் தமிழகத்தில் 3.17 கோடி பேர் தடுப்பூசி செலுத்தி உள்ளனர். என்றாலும் மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் தடுப்பூசி செலுத்துவதில் பின்தங்கியே உள்ளது.



தமிழகத்தில் ஒரு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் பட்டியலில் காஞ்சீபுரம் முதலிடத்தில் உள்ளது. அரியலூர், கடலூர், கோவை , விழுப்புரம் மாவட்டங்கள் அடுத்தடுத்த நிலையில் உள்ளன.

2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களில் நீலகிரி மாவட்ட மக்கள் முதலிடத்தில் இருக்கிறார்கள். அந்த மாவட்டத்தில் 85.65 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவை மாவட்டத்தில் 81.69 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி 2-வது இடத்தில் இருக்கிறார்கள்.

காஞ்சீபுரம் மாவட்ட மக்களில் 78.72 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். ராமநாதபுரம் மாவட்டத்தில் 76.06 சதவீதம் பேரும், அரியலூர் மாவட்டத்தில் 74.34 சதவீதம் பேரும் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.

தமிழகத்தில் ஒவ்வொரு வாரமும் வார இறுதி நாட்களில் தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. இதன் பயனாக தமிழகத்தில் சுமார் 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 3-ல் ஒருவர் தடுப்பூசி செலுத்தியவராக உள்ளனர்.

தேசிய அளவில் ஆய்வு செய்தததில் இதுவரை 157 கோடி தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. 135 கோடி பேர் கோவிஷீல்டு தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர். 20 கோடி பேர் கோவேக்சின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

மாநிலங்கள் பட்டியலில் இமாச்சலபிரதேசம் முதல் இடத்தில் இருக்கிறது. அங்கு முதல் தவணை தடுப்பூசியை 100 சதவீதம் பேர் போட்டு உள்ளனர். 2-வது தவணை தடுப்பூசியை 94.01 சதவீதம் பேர் போட்டு உள்ளனர். காஷ்மீர் மாநிலத்தில் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் 93.04 சதவீதமாக உள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் 85 சதவீதம் பேரும், குஜராத்தில் 89.3 சதவீதம் பேரும், கர்நாடகாவில் 77.9 சதவீதம் பேரும் 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். மொத்தத்தில் இந்தியாவில் 64.6 சதவீதம் பேர் 2 தவணை தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள்.

சுமார் 90 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி மட்டும் செலுத்தி இருக்கிறார்கள். 15 வயது முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களில் சுமார் 3½ கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர். 18 முதல் 44 வயது உடையவர்களில் 93 கோடி பேரும், 45 முதல் 59 வயதுடையவர்களில் 37 கோடி பேரும், 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயது உடையவர்கள் 22.6 கோடி பேரும் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.

தற்போது பூஸ்டர்தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியாவில் முதல் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், முன் கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த பட்டியலில் சுமார் 13.8 கோடி பேர் நாடுமுழுவதும் உள்ளனர். இவர்களில் இதுவரை 41.7 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொண்டு உள்ளனர்.

Tags:    

Similar News