உள்ளூர் செய்திகள்
ஓசூரில் துணிகரம்-வீட்டின் கதவை உடைத்து நகைகள்-மோட்டார் சைக்கிள் திருட்டு
ஓசூரில் பார்சல் சர்வீஸ் உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிளை மர்மகும்பல் திருடி சென்றது.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சரவணன் (வயது 38), இவர் தனியார் பார்சல் சர்வீஸ் நடத்தி வருகிறார்.
இந்தநிலையில், பொங்கல் பண்டிகைக்காக அவர் குடும்பத்துடன், மனைவியின் ஊரான அரூருக்கு சென்றார்.
இந்த நிலையில் நேற்று அவரது வீட்டுக் கதவு நீண்டநேரம் திறந்தநிலையில் கிடந்ததை கண்ட பக்கத்து வீட்டுக்காரர் சிவா என்பவர், சரவணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து அவர் விரைந்து வந்து வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மர்ம கும்பல் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே புகுந்து பீரோவையும் உடைத்து உள்ளே இருந்த ரூ.70 ஆயிரம் மதிப்பிலான 4 சவரன் தங்க நகைகளையும், மற்றும் வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளையும் திருடிச் சென்றிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் இதுகுறித்து ஓசூர் அட்கோ போலீசில் புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர். மேலும், கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்து சென்றுள்ளனர்.