உள்ளூர் செய்திகள்
மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 108 கோமாதா பூஜை
பொன்னமராவதி அருகே மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 108 கோமாதா பூஜை நடைபெற்றது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் தைமாட்டுப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோமாதா பூஜை நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு 7 ஆம் ஆண்டு நடைபெற்ற கோமாதா பூஜையில் கொன்னைப்பட்டி ஊர் பொதுமக்கள் தங்களது இல்லங்களில் வளர்த்து வரும் பசுங்கன்றுகளுடன் ஊரணி திடலில் திரண்டனர்.
அங்கு பசுங்கன்றுகள் மாலை, துண்டுடன் அலங்கரிக்கப்பட்டு கோமாதா பூஜையில் கலந்து கொண்டன. நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், ஊர் ஒற்றுமைக்காகவும் இந்த 108 கோமாதா பூஜை ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது.
இதனை நடத்திவரும் ஊராட்சி மன்ற தலைவர் செல்வமணி மற்றும் துரைசாமி, சுப்பிரமணி ஆகியோர் ஏற்பாட்டில் வைரவன் குருக்கள், பாலாஜி குருக்கள் அதிகாலையில் இருந்து கணபதி ஹோமம், கோமாதா அஸ்டலெட்சுமி பூஜை மற்றும் கோ பூஜை அர்ச்சனை செய்தனர்.
இதில் சுற்று வட்டாரா பகுதியை சேர்ந்த நகரத்தார்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். பூஜையை தொடர்ந்து பசு மாடுகளுக்கு புல், அகத்திக்கீரை, வாழைப்பழம், பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட உணவாக வழங்கப்பட்டன.
கோ பூஜையில் கலந்துகொண்ட அனைவருக்கும் காலாஞ்சி பிரசாதம் வழங்கப்பட்டன.