உள்ளூர் செய்திகள்
கண்காணிப்பு கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா இயக்கி வைக்கிறார்.

குற்ற நடவடிக்கைகளை தடுக்க வாரியங்காவலில் கண்காணிப்பு கேமராக்கள்

Published On 2022-01-16 12:42 IST   |   Update On 2022-01-16 12:42:00 IST
அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் ஊராட்சி பகுதிகளில் குற்ற நடவடிக்கைகளை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அரியலூர்:

அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் ஊராட்சி பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே.பெரோஸ்கான் அப்துல்லா இயக்கி வைத்தார்.

அக்கிராம மக்கள் பாதுகாப்பிற்காக ஊராட்சி நிர்வாகம் சார்பில் பொருத்தப்பட்ட 24 கண்காணிப்பு கேமராக்களை அவர் இயக்கி வைத்து, அனைத்து சம்பவங்களும் 24 மணி நேரமும் காவல் நிலையத்தில் இருந்து கண்காணிக்கப்படும் என்று தெரிவித்தார். 

தொடர்ந்து அவர் அக்கிராமத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். தொடர்ந்து அதனை பராமரிக்கவும் அவர் கேட்டுக்கொண்டார்.


நிகழ்ச்சிக்கு, ஆண்டிமடம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அருளப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமேனி, காவல் துணைக் கண்காணிப்பாளர் கதிரவன், பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக ஊராட்சித் தலைவர் மணிசேகர் வரவேற்றார். நிகழ்ச்சியில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள், வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Similar News