உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையம்

பயணிகள் குறைவால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது

Published On 2022-01-16 04:28 GMT   |   Update On 2022-01-16 04:28 GMT
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் வரத்து மற்றும் விமான சேவை குறைவால் சென்னை விமான நிலையம் வெறிச்சோடியது.
ஆலந்தூர்:

இந்தியா முழுவதும் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா முதல் மற்றும் 2-வது அலைக்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் கடந்த ஒரு மாதமாக ஒரு நாளைக்கு 270 புறப்பாடு மற்றும் வருகை விமானங்கள் இயக்கப்பட்டு, சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பயணிகள் பயணம் செய்து வந்தனர். ஆனால் கடந்த சில தினங்களாக கொரோனா 3-வது அலை பெருமளவு அதிகரித்து வருவதால் பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து பிற நகரங்களுக்கு 206 விமான சேவைகள் இயக்கப்பட்டு, அதில் 20 ஆயிரம் பேர் பயணம் செய்தனர்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகையையொட்டி வருகிற 18-ந் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் பயணிகள் வரத்து மேலும் குறைந்து விட்டதால், விமான சேவையும் குறைக்கப்பட்டது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையமே வெறிச்சோடி காணப்பட்டது.

சென்னையில் இருந்து நேற்று டெல்லி, மும்பை, மதுரை, தூத்துக்குடி, கோவை, ஐதராபாத், கொல்கத்தா உள்ளிட்ட நகரங்களுக்கு 90 விமானங்கள் இயக்கப்பட்டது. அதில் 6,408 பேர் பயணம் செய்தனர். அதேபோல் பிற நகரங்களில் இருந்து சென்னைக்கு 93 விமானங்கள் இயக்கப்பட்டு, அதில் 5,988 பேர் பயணம் செய்தனர். மொத்தம் 183 விமானங்களில் 12,396 பேர் மட்டுமே பயணம் செய்தனர்.

ஏற்கனவே கொரோனா 3-வது அலையால் விமான சேவை குறைந்து இருந்த நிலையில் பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக பயணிகள் எண்ணிக்கையும், விமான சேவையும் மேலும் குறைந்து விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

Similar News