உள்ளூர் செய்திகள்
சென்னை விமான நிலையம்

சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகள் இல்லாததால் 32 விமானங்கள் ரத்து

Published On 2022-01-15 14:12 IST   |   Update On 2022-01-15 14:12:00 IST
போதிய பயணிகள் இல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் என 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஆலந்தூர்:

சென்னையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது. இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக குறைந்தது. கடந்த மாதத்தில் ஒரு நாளைக்கு 30 ஆயிரத்திலிருந்து 34 ஆயிரம் வரை இருந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த வாரம் 20 ஆயிரமாக குறைந்தது. இதனால் உள்நாட்டு விமானங்களும் 270 லிருந்து கடந்த வாரம் 206 ஆக குறைந்தது. தற்போது 186 விமான சேவையாக குறைந்தது.

பொங்கல் பண்டிகையினால் தொடர் விடுமுறை, கொரோனா வைரஸ் காரணமாக பயணிகள் வருகை குறைந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் போதிய பயணிகள் இல்லாமல், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் வருகை மற்றும் புறப்பாடு விமானங்கள் என 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னைக்கு வரவேண்டிய பெங்களூர், டெல்லி, மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத், கொச்சி, மதுரை, தூத்துக்குடி, புனே, விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஞ்சி உள்ளிட்ட 16 விமானங்கள், அதைப்போல் சென்னையிலிருந்து இந்த நகரங்களுக்கு செல்ல வேண்டிய 16 விமானங்கள் என மொத்தம் 32 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானங்கள் ரத்து ஆனதால் பயணிகளுக்கு விமான கட்டணம் பணமாக திருப்பி அளிக்கப்படமாட்டாது. அதற்கு பதிலாக வருகின்ற மார்ச் 31-ம் தேதிக்குள் அந்த டிக்கெட்களை பயன்படுத்தி எந்த நகரமாக இருந்தாலும் பயணிக்கலாம் என்று விமான நிறுவனங்கள் அறிவித்துள்ளன. ஆனால் பயணிகள் தரப்பில் விமான நிறுவனங்களின் இந்த அறிவிப்பிற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். விமானம் ரத்தானால், விமான கட்டணத்தை விமான நிறுவனம் திருப்பி அளிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

Similar News