பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளை ஏலம் விட கோரி பூலாம்பட்டியில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
பதிவு: ஜனவரி 13, 2022 16:09 IST
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ளது பூலாம்பட்டி பேரூராட்சி. இந்த பேரூராட்சிக்கு சொந்தமாக பூலாம்பட்டி பேருந்து நிலையம், மேட்டூர் பிரதான சாலை உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் உள்ளன. இக்கடைகளுக்கு மூன்றாண்டுக்கு ஒருமுறை பொது ஏலம் நடத்தி வாடகை ஒப்பந்தம் செய்யப்பட்டு வாடகைக்கு விடப்பட்டு வந்தது.
இந்த நிலையில் பூலாம்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான கடைகளில் உணவகங்கள், பல்பொருள் அங்காடி உள்ளிட்டவை கடந்த 10 ஆண்டுகளாக பொது ஏலம் நடத்தப்படாமல் சொற்ப வாடகை உயர்வு செய்யப்பட்டு சம்மந்தப்பட்ட வாடகை ஒப்பந்ததாரர்களுக்கே மீண்டும் மீண்டும் வழங்கி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் பேரூராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதுடன், தனிப்பட்ட சிலரே பயனடையும் வகையில் வாடகை ஒப்பந்தம் அமைந்துள்ளதாகவும், வாடகை ஒப்பந்தத்தை உடனடியாக ரத்து செய்து பொது ஏலம் நடத்தி அதன் மூலம் கடைகளுக்கு புதிய வாடகையை நிர்ணயம் செய்திட வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் பூலாம்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.