உள்ளூர் செய்திகள்
பாம் ரவி கொலை சம்பவம்: பிரபல ரவுடியை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை
பாம் ரவி கொலை தொடர்பாக பிரபல ரவுடியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுச்சேரி:
புதுவை வாணரப்பேட்டையை சேர்ந்த பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டியும் படுகொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து முதலியார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திருந்தி வாழ்ந்த பழைய ரவுடி திப்ளானின் கொலைக்கு பழிக்குப்பழியா இந்த கொலை சம்பவம் நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் இந்த கொலைக்கு தீப்ளானின் நண்பர்களான சிறையில் உள்ள ரவுடியான வினோத், தீன் ஆகியோரின் தூண்டுதலின்பேரிலேயே நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அதன் அடிப்படையில் கொலைக்கு உதவியதாக வினோத்தின் தாய் ரமணி மற்றும் பிரகாஷ், சந்துரு, நவீன், சதீஷ், ராஜேஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோரை முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கொலை சம்பவத்திற்கு உடந்தையாக இருந்ததாகவும் ,ஆயுதம் வழங்கியதாகவும் வேல்ராம்பட்டை சேர்ந்த மோகன், எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த மாணிக்கம், நைனார்மண்டபத்தை சேர்ந்த சூர்யா ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே இந்த கொலை சம்பத்தில் ஈடுபட்ட வாணரப்பேட்டையை சேர்ந்த அருண் மற்றும் ரெட்டிச்சாவடியை சேர்ந்த பிரவீன் ஆகிய 2 பேர் சென்னை சைதாப்பேட்டை கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை போலீஸ் காவிலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை சம்பவத்திற்கு நாட்டு வெடிகுண்டு கொடுத்ததாக கடந்த மாதம் லாஸ்பேட்டையை சேர்ந்த 6 பேரை சிறப்பு அதிரடிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இனியன் மற்றும் முதலியார்பேட்டை போலீசார் கைது செய்து காலப்பட்டு சிறையில் அடைத்தனர். விசாரணையில் கொலைக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்கள், நாட்டுவெடிகுண்டு பயங்கர ஆயுதங்கள் ஆகிறவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் சிறையில் உள்ள வினோத், தீனை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பாம் ரவி கொலையில் பா.ஜனதாவை சேர்ந்த இளைஞர் அணி செயலாளர் விக்கி என்ற விக்னேஷ்வரன் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் சமீபத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கொலையில் சிறையில் இருக்கும் பிரபல ரவுடியான மர்டர் மணிகண்டன் சம்பந்தப்பட்டிருப்பது.தெரியவந்தது.
இந்தநிலையில் முதலியார்பேட்டை போலீசார் புதுவை கோர்ட்டில் மணிகண்டனை காவலில் எடுத்து விசாரிக்க முறையிட்டனர். அதன்படி கோர்ட்டு அனுமதியளித்ததன் பேரில் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க மர்டர் மணிகண்டனை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சிறையிலிருந்து அழைத்து வந்தனர். இவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையிலேயே இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மற்றும் காரணமானவர்கள் குறித்த பரபரப்பு தகவல் தெரியும்.
இந்த கொலையில் தொடர்புடைய காஞ்சிபுரத்தை சேர்ந்த கூலிப்படைத்தலைவன் தியாகு உள்ளிட்ட சிலர் மற்றும் கொலைக்கு பிரான்சிலிருந்து பணம் அனுப்பிய முத்தியால்பேட்டையே சேர்ந்தவரையும் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டுவருகின்றனர்.