உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

பஞ்சாப் தேர்தலுக்காக பா.ஜ.க. நாடகமாடுகிறது ஏ.வி.சுப்ரமணியன் குற்றச்சாட்டு-

Published On 2022-01-11 12:06 IST   |   Update On 2022-01-11 12:06:00 IST
பஞ்சாப் தேர்தலுக்காக பா.ஜனதா நாடகமாடுகிறது என்று புதுவை காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்பிரமணியன் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பஞ்சாபில் பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டது தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 4 பேர் கொண்ட விசாரணை  குழு அமைத்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பாக நடந்து வரும் பிற விசாரணைகளையும் ரத்து செய்துள்ளது.  பஞ்சாப் மாநிலம் பதிண்டா என்ற இடத்துக்கு பிரதமர் சென்றபோது விவசாயிகள் மறியலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. 

இதனால்  பிரதமர் சென்ற  வாகனங்கள் செல்ல முடியவில்லை. 20 நிமிடம் மேம்பாலத்தில் பிரதமர் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டதால் நிகழ்ச்சிகளை ரத்து செய்து  திரும்பி விட்டார்.  இதற்காக மாநில அரசை கலைக்கும் அளவு திட்டமிட்டு கட்சியினரை தூண்டிவிட்டு பா.ஜனதா போராட்டம் நடத்துகிறது.

புதுவையிலும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் போராட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர்  பாதுகாப்பு குழு மீதுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 
மாநில அரசு மீது குற்றம் சாட்டுவது நியாயமற்றது. இது பஞ்சாபில் நடக்க உள்ள  தேர்தலுக்காக பா.ஜனதா நடத்தும் நாடகம். பா.ஜனதாவின் திட்டமிட்ட சதி குறித்து மக்களிடம் தெரிவிக்க காங்கிரஸ் சார்பில் போராட்டம், சமூக  வலைதளங்களில் பிரசாரம் செய்யப்படும். 

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Similar News