உள்ளூர் செய்திகள்
புதுவையில் கைவினை பொருட்கள் கண்காட்சி
புதுவை கடற்கரை காந்தி திடலில் கைவினை பொருட்கள் கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
மத்திய ஜவுளி அமைச்சகம், கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகம் மற்றும் புதுவை மாநில கூட்டுறவு கைவினை மற்றும் கைத்தறி இணையம் சார்பில் கிராப்ட் பஜார் என்ற அனைத்திந்திய கைவினை பொருட்கள் கண்காட்சி மற்றும் விற்பனை புதுவை கடற்கரை சாலையில் உள்ள காந்தி திடலில் தொடங்கியது. இந்த கண்காட்சியை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை சிறப்பு செயலர் மலர்க்கண்ன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முகமது மன்சூர், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைவினை அபிவிருத்தி ஆணையர் அலுவலகத்தின் தென்மண்டல இயக்குனர் பிரபாகரன், துணை இயக்குனர் வினோத்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் ராகினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கண்காட்சி வருகிற 19-ந் தேதி வரை தொடர்ந்து 10 நாட்களுக்கு தினமும் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடக்கிறது. கைத்திறன் சந்தை படுத்துததல் மற்றும் சேவை மையங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட சுமார் 100 கைவினை கலைஞர்கள் அவர்களின் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியமிக்க கைத்திறன் மற்றும் தேசிய மரபு சார்ந்த படைப்புகளை இக்கண்காட்சியில் பார்வைக்கும், விற்பனைக்கும் வைத்துள்ளனர்.
குறிப்பாக உத்தரபிரதேசத்தின் கலை உலோக பொருட்கள், கலைநயமிக்க கல்படைப்புகள், அச்சிடப்பட்ட துணி வகைகள், பீகாரின் மதுப்பணி ஓவியங்கள், பஞ்சாப்பின் புல்காரி வகைகள், தோல் பொருட்கள், அரக்கு வளையல்கள், மத்தியபிரதேசத்தின் டோக்ரா வகை உலோக வகைகள் மகாராஷ்டிராவின் கலைநயமிக்க தோல்காலணி வகைகள், துணி பொம்மைகள், கட்ச்பூத் தையல் வேலைகள், குஜராத்தின் பட்டோலா புடவைகள், பட்ட சித்திர ஓவியங்கள் உள்ளிட்டவை இக்காண்காட்சியில் காட்சிக்கும், விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன.