உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபர் கைது
திட்டக்குடி அருகே அரசு பஸ் ஓட்டுநரை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திட்டக்குடி:
விருத்தாசலத்தில் இருந்து நேற்று முன்தினம் மாலை பயணிகளை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து திட்டக்குடிக்கு விருத்தாசலம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த பிரகாஷ் ( 44 ) என்பவர் ஓட்டினார் . கண்டக்டராக ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள காவனூரை சேர்ந்த பூமாலை ( 40 ) பணியில் இருந்தார்.
பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்ற போது அங்கு வந்த வாலிபர் ஒருவர், பஸ் டிரைவரிடம் தகராறில் ஈடுபட்டு அவரை தாக்கியதாக தெரிகிறது. இதை தடுக்க வந்த கண்டக்டரையும் வாலிபர் தாக்கியதாக தெரிகிறது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பெண்ணாடம் காவல் உதவி ஆய்வாளர் தீபன் மற்றும் போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் பெண்ணாடம் சோழநகர் பகுதியைச் சேர்ந்த நாகராஜன் மகன் அகிலன் ( 19 ) என தெரியவந்தது . இதுகுறித்து புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.