உள்ளூர் செய்திகள்
புதுவையில் பாரதீய ஜனதா சார்பில் மவுன போராட்டம் நடந்தது.

புதுவையில் பா.ஜ.க.வினர் மவுன போராட்டம்- அமைச்சர்கள்- எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு

Published On 2022-01-08 15:52 IST   |   Update On 2022-01-08 15:52:00 IST
புதுவையில் பாரதீய ஜனதாவினர் மவுன போராட்டம் நடத்தினர்.
புதுச்சேரி:

பஞ்சாப் மாநிலத்துக்கு சென்ற பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதை கண்டித்து நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் திட்டமிட்டு குளறுபடி ஏற்படுத்தி வளர்ச்சி திட்டங்களை தடுத்து தேசவிரோத செயல்களில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியை கண்டித்து புதுவை மாநில பா.ஜனதா சார்பில் கடற்கரை சாலை காந்தி சிலை அருகே இன்று மவுன போராட்டம் நடந்தது. 

போராட்டத்துக்கு மாநில தலைவர் சாமிநாதன் தலைமை வகித்தார். உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலை வகித்தார். அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு,    வெங்கடேசன், அசோக்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் தீப்பாய்ந்தான், தங்க. விக்ரமன் மற்றும் நிர்வாகிகள் செல்வம், வெற்றிச்செல்வம், கோபதி, என்ஜினீயர் சிவக்குமார், மோகன்குமார், ஜெயலட்சுமி, ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் ஜனநாயக விரோத, தேச விரோத காங்கிரஸ் அரசை   கண்டிக்கிறோம். பிரதமருக்கு பாதுகாப்பு அளிக்க தவறிய பஞ்சாப் காங்கிரஸ் அரசை கண்டிக்கிறோம், ராஜினாமா செய், ராஜினாமா செய் பஞ்சாப் காங்கிரஸ் முதல்வரே ராஜினாமா செய் என்ற பேனரை கையில் வைத்திருந்தனர். 

போராட்டம் குறித்து அமைச்சர் நமச்சிவாயம், மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பிரதமரின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவித்த பஞ்சாப் காங்கிரஸ் அரசின் முதல்&அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும். பிரதமரிடம் மன்னிப்பும் கேட்க வேண்டும். இந்திய இறையாண்மைக்கு எதிராக நடந்த பஞ்சாப் காங்கிரஸ் முதல்-அமைச்சரை கண்டித்து 13-ந்தேதி வரை தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். 

9.1.2022 அன்று அம்பேத்கர் சிலை அருகே பாஜகவின் தலித் பிரிவு சார்பில் போராட்டம் நடைபெறும். காலையில் மாற்றுத்திறனாளிகள் சார்பில் பிரதமர் நீடூழி வாழ வேண்டி கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் மகா யாகம் நடக்கிறது.  மாநில இளைஞரணி சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும். நாடு முழுவதும் பா.ஜனதா சார்பில் எங்கள் கண்டனத்தை தொடர்ந்து பதிவு செய்து வருகிறோம். 

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News