உள்ளூர் செய்திகள்
குட்டையில் கிடந்த ரேசன் அரிசி மூட்டைகள்
சோழம்பேட்டையில் ரேசன் அரிசி மூட்டைகள் குட்டையில் வீசப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை அடுத்துள்ள சோழம்பேட்டை கிராமத்திலுள்ள இரு குட்டைகளில் ரேசன் கடைகள் மூலம் ஏழைகளுக்கு வழங்கப்படுகின்ற அரிசிகள் மூட்டை, மூட்டையாக கிடந்தது அப்பகுதியில்
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சோழம்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். பெரும்பாலான மக்கள் அரசு வழங்கும் இலவச ரேசன் அரிசியையே நம்பி வாழும் சூழலில் அக்கிராமத்திலுள்ள மாரியம்மன்கோவிலின் பின்புறம் அமைந்துள்ள இரு குட்டைகளிலும் ரேசன் அரிசி மூட்டை, மூட்டையாக மிதப்பதாக தகவல் அறிந்து பொதுமக்கள் சென்று பார்த்து வேதனை அடைந்தனர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன் கூறியபோது, அன்றாடம் உணவுக்கு பெரும்பாலான குடும்பங்கள் அரசு வழங்கும் ரேசன் அரிசியை தான் நம்பி வாழும் சூழலில் சோழம்பேட்டை கிராமத்தில் உள்ள குட்டைகளில் மூட்டை, மூட்டையாக அரிசி மிதப்பது அதிர்ச்சியளிக்கிறது.
தரமான அரிசியை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்திவரும் நிலையில் ரேசன் அரிசி கொட்டப்பட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. மாவட்ட மற்றும் வட்ட வழங்கல்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும் என்றார்.
ஏழை மக்களுக்கு வழங்கப்படும் அரிசிக்கு அளவீடு செய்து வழங்கும் இக்காலத்தில் குளத்திலும், குட்டையிலும் தூக்கிவீசப்பட்டிருப்பதை
அப்பகுதி மக்கள் கடும் அதிர்ச்சியுடன் பார்த்து செல்கின்றனர்.