உள்ளூர் செய்திகள்
அரசு டவுன் பஸ் கவிழ்ந்து விபத்து
அரசு டவுன் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 13 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள அணிகுதிச்சான் கிராமத்திலிருந்து விருத்தாச்சலம் நோக்கி அரசு நகர பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. சென்னை, கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் ஆண்டிமடம் அருகே உள்ள ஆத்துக்குறிச்சி, கருக்கை கிராமங்களுக்கு இடையே பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிரே சென்னையிலிருந்து கும்பகோணம் நோக்கி வந்த லாரி, அரசு நகரப் பேருந்து மீது மோதுவது போல் வேகமாக வருவதை பார்த்த, அரசு நகரப் பேருந்து ஓட்டுனர் பிரகாஷ் பஸ்சை இடதுபக்கத்தில் திருப்பினார்.
அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ், சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பயணிகள் 13 பேருக்கு காயம் ஏற்பட்டது.
காயமடைந்த அனைவரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக உடனடியாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.