உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

புதுவை ஹார்டுவேர்ஸ் கடையில் குட்கா பறிமுதல்-4 பேர் கைது

Published On 2022-01-08 05:43 GMT   |   Update On 2022-01-08 05:43 GMT
புதுவை சின்னசுப்புராய பிள்ளை வீதியில் ஹார்டுவேர்ஸ் என்ற கடை பெயரில் போதை பொருட்கள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:


புதுவை சின்னசுப்புராய பிள்ளை வீதியில் ஹார்டு வேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை என்ற பெயரில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பெரியக்கடை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சப்&இன்ஸ்பெக்டர் சிவசங்கர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது அந்த கடையில் சிலர் வந்து செல்வதுமாக இருந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த கடையில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த கடையில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான ஹான்ஸ், குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் ஏராளமானவை விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்தை போலீசார் கண்டனர். இதையடுத்து அந்த கடையில் இருந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். 

விசாரணையில் அவர்கள் புதுவை தென்னஞ்சாலை ரோடு பகுதியை சேர்ந்த மகேந்திரன் (வயது 36), உருளையன்பேட்டை ஜான்சிநகரை சேர்ந்த ஜெமராசன் (48) மற்றும் சின்னசுப்புராயபிள்ளை வீதியை சேர்ந்த மோகன்லால் (25), பெங்களூருவை சேர்ந்த ராஜாராம் (32) என்பது தெரியவந்தது.

இவர்களில் மகேந்திரனும், ஜெமராசனும் கூட்டாக சேர்ந்து ஹார்டுவேர்ஸ் மற்றும் எலக்ட்ரிக்கல் கடை என்ற பெயரில் போதை பொருட்கள் விற்பனை செய்ததும், இவர்களது கடையில் மோகன்லால் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.

மேலும் மகேந்திரனுக்கும், ஜெமராசனுக்கும் பெங்களூருவை சேர்ந்த ராஜாராம் போதை பொருட்களை சப்ளை செய்துள்ளார். இதற்கான பணத்தை வசூல் செய்ய வந்தபோது அவரும் போலீஸ் பிடியில் சிக்கி கொண்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இவர்களிடமிருந்து 4 செல்போன்கள், தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், விலை உயர்ந்த சிகரெட் பாக்கெட்டுகள் மற்றும் விற்பனை பணம் ரூ-.3 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News