கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் சாலையில் இரும்பு தடுப்பு கட்டை அமைத்ததால் போக்குவரத்து பாதிப்பு
கடலூர்:
கடலூர் மாநகரின் முக்கிய பகுதியாக திருப்பாதிரிப்புலியூர் பகுதி உள்ளது. இங்கு வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக்கடைகள், மார்க்கெட் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
மேலும் கடலூரில் இருந்து திருவந்திபுரம் வழியாக பண்ருட்டிக்கு செல்லக் கூடிய அனைத்து வாகனங்களும் சுப்பராய செட்டி தெரு வழியாக சென்று வருகின்றன. இதன்காரணமாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள், பொதுமக்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.
இந்த சாலையில் பாதாள சாக்கடையில் மூடப்பட்டுள்ள சிமெண்டு கட்டைகள் சேதமடைந்தது. இதன் காரணமாக அவ்வழியாக செல்லும் வாகனங்கள் பாதாள சாக்கடை மீது சென்றால் பெருமளவில் பாதிப்பு ஏற்பட்டு பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டு உயிர்பலி அபாயம் நிலவி வருகிறது. தற்போது பாதாள சாக்கடை மீது வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் செல்லாத வகையில் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆனால் இந்த சாலையில் எப்போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருவதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வரும். இந்த நிலையில் சாலையில் இரும்பு தடுப்பு கட்டை வைத்துள்ளதால் தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு அனைத்து தரப்பு மக்களும் கடும் பாதிப்படைந்து வருகின்றனர்.
ஆகையால் கடலூர் மாநகராட்சி நிர்வாகம் சேதமடைந்த சிமெண்ட் கட்டைகளை உடனுக்குடன் சரிசெய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.