உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்

கடலூர் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் வழங்குவதில் குளறுபடிகள்

Published On 2022-01-07 11:45 GMT   |   Update On 2022-01-07 11:45 GMT
அதிகாரிகள் எந்த வகையிலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் போதிய வழிகாட்டுதல்படி இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகளும் விவசாய சங்கங்களும் எதிர்பார்க்கின்றனர்.
புவனகிரி:

கடலூர் மாவட்டம் முழுவதும் வேளாண்மை பொறியியல் துறையான சிதம்பரம், விருத்தாசலம், கடலூர் ஆகிய அலுவலகங்கள் மூலம் விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்கப்படும் என கடலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் ஆன்லைன் மூலம் விவசாயிகள் பதிவு செய்ய அழைப்பு விடுத்துள்ளார். தங்கள் பெயரை வேளாண் உபகரண வெப்சைட்டில் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்தனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகளும் ஏப்ரல் 2021 மாதத்தில் அதற்கான இணைய தளத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். மீண்டும் பதிவு செய்யுங்கள் என்று தெரிவித்திருப்பது விவசாயிகள் அதிசயமாகவும் ஆச்சரியமாகவும் பார்க்கின்றனர் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் சர்க்கரை ஆலை உள்ளது. அந்த ஆலைகளுக்கு ஏராளமான விவசாயிகள் அந்தந்த சர்க்கரை ஆலைக்கு பதிவு செய்து கரும்பு பயிரிட்டு வருகின்றனர். கரும்பு வெட்டிய பின் அந்த தோகையை விவசாயிகள் தீ வைத்து கொளுத்துவதால் காற்று மாசுபடுவதுடன் வயலுக்கு உரமாவதும் தடுக்கப்படுகிறது.

இதனை தவிர்க்க அரசு மானிய விலையில் மல்சர் என்ற கரும்பு தோகை தூளாக்கும் எந்திரத்தை இதுவரை ஒன்று கூட விவசாயிகளுக்கு வழங்கவில்லை. தற்பொழுதும் ஒதுக்கீடு செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகள் ஏராளமானோர் உள்ளனர். தற்போது அறிவிப்பில் ஒரு நடவு எந்திரம் கூட ஒதுக்கப்படவில்லை. வைக்கோல் கட்டும் எந்திரம் ஒன்றுகூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. அதிகளவில் பயிர் செய்யும் விவசாயிகள் அந்த வைக்கோலை ஆள் வைத்து வீட்டிற்கு கொண்டு வர அதிக பொருள் மற்றும் நிதி சுமை ஏற்படுகிறது.
இதனால் கால்நடைகளுக்கு தீவன பற்றாக்குறை ஏற்படுகிறது.

தற்பொழுது ஆதிதிராவிடர் என்று தனி ஒதுக்கீடாக டிராக்டர் ரோட்டவேட்டர். பவர்டிரில்லர் ஒதுக்கீடு செய்கின்றனர். ஆனால் மற்ற பிரிவினருக்கு மட்டும் ஏன் ஒதுக்கீடு செய்யபடவில்லை இதனால் பெரும்பாலானோர் அதிருப்தியில் உள்ளனர்.

தற்பொழுது 38 டிராக்டர்கள் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில் மினி டிராக்டர் எத்தனை 2வீல்டிரைவ், 4வீல்டிரைவ் எத்தனை டிராக்டர் உள்ளது என்று தெரிவிக்காமல் ரகசியம் காக்கப்படுகிறது. இதனுடைய ரகசியம் என்ன என்று விவசாயிகள் கேள்விக்குறி வைத்துள்ளனர்.

ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் எந்தெந்த கருவிகள் எந்தெந்த கருவிகள் என்று தெரிவிக்கப்படவில்லை. சில குறிப்பிட்ட ஒன்றியங்களுக்கு அதிகப்படியான கருவிகள் ஒதுக்க இருப்பதாக தெரியவருகிறது. அனைத்து ஒன்றியத்தில் உள்ள விவசாயிகளுக்கு பாரபட்சம் இல்லாமல் சமமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

மேலும் கடலூர் டெல்டா மாவட்ட பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த முறை பதிவு செய்து தேர்ந்தெடுத்தவர்கள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள விவசாயிகளுக்கு உபகரண கருவிகள் வழங்கப்படுமா? இல்லையா? அதை ரத்து செய்யப்படுமா? என்று கடலூர் மாவட்ட வேளாண் பொறியியல்துறை தெரிவிக்க வேண்டும் என பதிவு செய்த விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

டெல்டா மாவட்டத்தில் பெருமளவில் சம்பா நெல் சாகுபடி செய்து அறுவடை செய்த பின்பு அந்த வயலில் உளுந்து பச்சைப்பயிறு இதுபோன்ற பருப்பு வகைகள் பெரிய அளவில் பயிர் செய்து வருகின்றனர்.

இதனை அறுவடை செய்து அடித்து சுத்தம் செய்ய பல தானிய அடிக்கும் கருவியும் மானிய விலையில் வழங்க வேண்டும். இதற்கு அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். தற்போது கடலூர் மாவட்டத்தில் 38 பெரிய டிராக்டர்கள் வழங்கப்பட உள்ளது. இதனை பெரு விவசாயிகள் மட்டும்தான் பயனடைய முடியும்.

குறிப்பாக ஒரு டிராக்டர் விலை சுமார் ரூ.8 லட்சத்தில் இருந்து ரூ.11 லட்சம் வரை எந்திரத்தின் தன்மைக்கேற்ப விற்கப்படுகிறது. ஒரு டிராக்டர் ரூ.11 லட்சம் என்றால் சிறிய விவசாயிகளுக்கு 5 பவர் டில்லர் வழங்கலாம். இதனால் சிறு விவசாயிகள் நூற்றுக்கணக்கான பேர் பயன் அடைவார்கள்.

அதிகாரிகள் எந்த வகையிலும் விவசாயிகளை வஞ்சிக்காமல் போதிய வழிகாட்டுதல்படி இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என விவசாயிகளும் விவசாய சங்கங்களும் எதிர்பார்க்கின்றனர்.
Tags:    

Similar News