உள்ளூர் செய்திகள்
சென்னை- காட்பாடிக்கு மின்சார ரெயில்கள் இயக்கும் திட்டம் ஏதும் இல்லை
சென்னை- காட்பாடிக்கு மின்சார ரெயில்கள் இயக்கும் திட்டம் ஏதும் இல்லை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
அரக்கோணம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ரெயில் நிலையத்தில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் ஆய்வு நடத்தினார்.
பின்னர் ரெயில் நிலையத்தில் ஒட்டுனர்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கும் மையத்தையும், 2-வது நடை மேடையில் குடிநீர் பாட்டில்களை நசுக்கும் (கிரஷர்) எந்திரத்தை திறந்து வைத்தார்.
ரெயில்வே பாதுகாப்பு படை வீரர்களுக்கான ஏசி வசதி கொண்ட தங்குமிடத்தை திறந்து வைத்து மரக்கன்றுகளை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ் தொடர்ந்து விண்டர்பேட்டையில் ரெயில்வே ஊழியர்களுக்கான குடியிருப்பையும் திறந்து வைத்தார்.
அவர் கூறியதாவது:-
சென்னையிலிருந்து காட்பாடிக்கு மின்சார ரெயில் களை இயக்கும் திட்டம் எதுவும் இல்லை. விரைவு ரெயில்களில் பொது பெட்டிகள் விரைவில் முழுமையாக இணைக்கப்படும்.
ரெயில் பெட்டிகளில் குறிப்பாக மின்சார ரெயில் களில் கல்லூரி மாணவர்கள் பயணத்தின்போது சாகசங்கள் செய்வதாகவும், பயணிகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்வதாகவும் குற்றச் சாட்டுகள் வந்துள்ளன.
தொடர்ந்து அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் மாணவர்கள் மீது கண்டிப்பாக ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும். மோசூர் ரெயில் நிலையம் அருகே ரெயில்வே வளாகத்தில் இருக்கும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றார்.
இதனையடுத்து அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்கம் சார்பில் தலைவர் நைனாமாசிலாமணி பொது செயலாளர் குணசீலன் மற்றும் நிர்வாகிகள் பொது மேலாளரிடம் மனு அளித்தனர்.
அதில் அரக்கோணம் பழனிபேட்டை பகுதியில் உள்ள மூன்றாவது கண் சுரங்க நடைபாதையை உடனடியாக சீர் செய்து திறக்க வேண்டும். அரக்கோணத்தில் இருந்து சென்னைக்கு மணி நேரத்திற்கு ஒரு மின்சார ரெயில் இயக்க வேண்டும்.
திருத்தணியில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு ரிட்டன் டிக்கெட் வழங்க வேண்டும், அரக்கோணத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு ரெயில் இயக்க வேண்டும்.
அரக்கோணத்தில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு வழியாக சென்னை கடற் கரைக்கு மின்சார ரெயில் இரவு நேரத்தில் இயக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மற்றும் சென்னை கோட்ட மேலாளரிடமும் அளித்தனர்.
ஆய்வின்போது ரெயில்வே துறையின் பல்வேறு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.