உள்ளூர் செய்திகள்
வயலில் தேங்கிய மழைநீர் வடியாததால் சம்பா அறுவடை பாதிப்பு
வேதாரண்யம் பகுதியில் வயலில் தேங்கியுள்ள மழைநீர் வடியாததால் சம்பா அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம், கரியாப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் கடந்த வாரம் பெய்த கன மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரகணக்கான ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.
பல இடங்களில் பயிர்கள் முளைவிட தொடங்கி உள்ளது-.
தற்போது மழை நின்றும் தண்ணீர் வடியவில்லை.
இதனால் விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது, இந்த ஆண்டு சம்பா பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு திடீர் கனமழையால் ஆள் கூலி கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் நஷ்டம் அடைந்துள்ளோம்.
சில இடங்களில் மூழ்கிய பயிர்களை ஆட்கள் மூலம் அறுவடை செய்கிறோம்.
வேளாண்மை துறை அதிகாரிகள் உடனடியாக மூழ்கிய நெற்கதிர்களை பார்வையிட்டு நிவாரண தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.