உள்ளூர் செய்திகள்
வேன் மீது கார் மோதி நிற்கும் காட்சி

காஞ்சிபுரம் அருகே வேன் மீது கார் மோதல்- 3 பேர் உயிரிழப்பு

Published On 2022-01-06 13:04 IST   |   Update On 2022-01-06 13:04:00 IST
காஞ்சிபுரம் அருகே வேன் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காஞ்சிபுரம்:

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பி அருகே உள்ள சிறுகளத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி.

இவர் திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியில் வாகனங்களுக்கு வாட்டர்சர்வீஸ் நிறுவனம் நடத்த திட்டமிட்டு இருந்தார். இதற்காக இடமும் பார்த்து இருந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் வாட்டர் சர்வீசுக்காக தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்காக நேற்று இரவு சுந்தரமூர்த்தி பொன்குடி கிராமத்தைச் சேர்ந்த செல்வம் என்பவருடன் தனது புதிய காரில் ஓரிக்கை பகுதியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்தார்.

பின்னர் அவர்கள் சென்னைக்கு சென்று பொருட்களை வாங்க திட்டமிட்டு இருந்தனர். இன்று அதிகாலை அவர்கள் ஓரிக்கையைச் சேர்ந்த டிரைவர் சரவணன் என்பவருடன் சென்னை நோக்கி காரில் புறப்பட்டு சென்றனர்.

மானாமதி அருகே காஞ்சிபுரம்-வந்தவாசி சாலையில் வந்தபோது எதிரே மேல்மருவத்தூர் கோவிலுக்கு பக்தர்கள் சென்ற வேன் மீது பயங்கரமாக கார் மோதியது.

இதில் வேன் முன் பகுதிக்குள் கார் சொருகிக் கொண்டது. இந்த விபத்தில் காரில் இருந்த சுந்தரமூர்த்தி, செல்வம், சரவணன் ஆகிய 3 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். மேலும் வேனில் இருந்த பக்தர்கள் சிலருக்கும் லேசான காயம் ஏற்பட்டது.

ஜே.சி.பி. எந்திரம் தகவல் அறிந்ததும் பெருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாகர் மற்றும் போலீசார் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கார், வேனுக்குள் செருகி இருந்ததால் உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜே.சி.பி. எந்திரம் கொண்டுவரப்பட்டு கார் அப்புறப்படுத்தப்பட்டது.

மீட்கப்பட்ட 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அதிகாலை ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News