உள்ளூர் செய்திகள்
வயலில் மழைநீரில் சாய்ந்து அழுகிவரும் நெற்பயிர்களை வேதனையுடன் காட்டும் விவசாயிகள்.

1000 ஏக்கரில் மூழ்கிய சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம்

Update: 2022-01-05 10:32 GMT
மூழ்கிய சம்பா பயிர்கள் முற்றிலும் சேதமானது.
நாகப்பட்டினம்:

திருமருகல் வட்டார பகுதியில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருமருகல் வட்டாரத்தில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்த தொடர் மழையால் கீழப்பூதனூர், திருச்செங்காட்டங்குடி, திருமருகல், திருக்கண்ண புரம், திருப்புகலூர், வடகரை, கோட்டூர், விற்குடி, கீழத்தஞ்சாவூர், எரவாஞ்சேரி, திட்டச்சேரி, குத்தாலம், நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல் மழைநீர் சூழ்ந்தது.

நடவு செய்யப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த கோ.46,1009,பிபிடி நெல் ரகங்கள் ஆயிரம் ஏக்கர் சம்பா நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி அழுகிய நிலையில் உள்ளது.தற்போது மழை நீர் வடிய தொடங்கி வருகிறது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்கள் அழுகி துர்நாற்றம் வீசி வருகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில் கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் மழையினால் பாதிக்கப்பட்டிருந்த விவசாயிகள், மீண்டும் பெய்த கனமழையால் பாதிப்புக் குள்ளாகி உள்ளோம்.

ஏக்கருக்கு 25 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்து நன்கு வளர்ந்த நெற்பயிர்கள் இப்படி ஆகி விட்டது என்றும் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்களை முறைப்படி கணக்கெடுத்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News