உள்ளூர் செய்திகள்
2 வீடுகளில் பூட்டை உடைத்து பணம் கொள்ளை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.30 ஆயிரத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே மைக்கேல்பட்டி கிராமத்தில், கூழாட்டுகுப்பம் கிராமத்தை சேர்ந்த மரியபாக்கியம் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டில் தா.பழூர் தனியார் மருந்து கடையில் வேலை செய்யும் மேலணிக்குழி கிராமத்தை சேர்ந்த அமிர்தலிங்கம் மகன் விஜய் ஆனந்த் (வயது 29) என்பவர் வாடகைக்கு வசித்து வருகிறார்.
இவர் வழக்கம் போல், இரவு 10 மணி அளவில் மருந்துக் கடையில் வேலை முடிந்து, வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, அறைகளின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தன. அங்கு வைக்கப்பட்டிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த பொருட்கள் கீழே சிதறி கிடந்தன. மேலும் வீட்டில் வைத்திருந்த சம்பள பணம் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இதேபோல் தா.பழூர் அருகே உள்ள சிலால் கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தலிங்கம் (65). திருச்சி பெல் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் திருச்சியில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு கடந்த ஜனவரி 1&ந்தேதி சென்றுவிட்டு, சம்பவத்தன்று வீடு திரும்பியுள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, அலமாரியில் வைக்கப்பட்டிருந்த ரூ.20 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இந்த இரு கொள்ளை சம்பவவங்கள் குறித்து, தனித்தனியாக கொடுத்த புகாரின் பேரில், தா.பழூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.