உள்ளூர் செய்திகள்
பனிப்பொழிவால் இளநீர் விற்பனை சரிவு
தற்போது இளநீர் விலையை குறைத்து விற்பனை செய்தாலும் இளநீர் விற்பனை மந்தமாகவே உள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் முத்தூர் நகர, சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் நிலவி வரும் கடும் பனிப்பொழிவால் இளநீர் விலையும், விற்பனையும் சரிந்து உள்ளது.
இதுபற்றி இளநீர் வியாபாரி ஒருவர் கூறியதாவது:
இப்பகுதிகளில் பொதுவாக ஆண்டு முழுவதும் பகல் நேரங்களில் இளநீர் விற்பனை இருந்து கொண்டே இருக்கும். இதில் கோடை காலமான ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இளநீர் விற்பனை நன்கு சூடு பிடித்து விறுவிறுப்பாக விற்பனை ஆகும்.
இதன்படி கோடைகாலத்தில் சுமார் 5 மாதங்களுக்கு மேல் ஒரு இளநீரின் விலை ரூ 60 வரை உயர்த்தி விற்பனை செய்யப்படும். இந்த நிலையில் இப்பகுதிகளில் கடந்த 2 வார காலமாக பெய்து வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக இளநீர் விற்பனை வெகுவாக சரிந்து உள்ளது.
அதாவது ஒரு சாதாரண இளநீர் ரூ.30க்கும், செவ்விளநீர் ரூ.40-க்கும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடும் பனிப்பொழிவால் இப்பகுதிகளில் தற்போது இளநீர் விலையை குறைத்து விற்பனை செய்தாலும் இளநீர் விற்பனை மந்தமாகவே உள்ளது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதிகளில் ஏற்பட்ட கடும் வறட்சி காரணமாக விவசாயிகளின் ஏராளமான தென்னை மரங்கள் காய்ந்துவிட்டன. இதில் உயிர் பிழைத்தும், புதிய தென்னை மரங்களில் இருந்தும் தற்போது இளநீர் வெட்டி கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்றார்.