உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டத்தில் சிறார்களுக்கான தடுப்பூசி முகாம் தொடக்கம்
அரியலூர் மாவட்டத்தில் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கிவைத்தார்.
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் 15 முதல் 18 வயதிற்குட்பட்ட 34 ஆயிரத்து 800 சிறார்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 118 அரசு பள்ளிகள், 15 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் உள்ளன. இதில் பயிலும் பத்தாம் வகுப்பு, பதினொன்றாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சுகாதாரத்துறை சார்பில் சிறப்பு முகாம்கள் மூலம் கோவேக்சின் தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியது. முதற்கட்டமாக இன்று 6 ஒன்றியங்களுக்குட்பட்ட 23 பள்ளிகளில் 4,545 மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. இம்முகாமினை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தொடங்கி வைத்தார்.