உள்ளூர் செய்திகள்
கொரோனா தடுப்பூசி

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் 34,800 பேருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி

Published On 2022-01-03 17:22 IST   |   Update On 2022-01-03 17:22:00 IST
அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மாணவ- மாணவிகள் 34,800 பேருக்கு இன்று முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதற்காக இன்று முதற்கட்டமாக 31 பள்ளிகளில் சிறப்பு முகாம் நடக்கிறது.
அரியலூர்:

மத்திய அரசின் உத்தரவின்பேரில், தமிழக அரசின் வழிகாட்டுதலின்படி தமிழகத்தில் இன்று (திங்கட்கிழமை) முதல் 15 முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த பணியை சென்னையில் இன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இதைத்தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் 15 வயது முதல் 18 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது.

மாவட்டத்தில் உள்ள 118 அரசு பள்ளிகள், 15 அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் 32 தனியார் பள்ளிகள் என மொத்தம் 165 பள்ளிகளில் 10 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் 34,800 மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் முதற்கட்டமாக இன்று 31 பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. தடுப்பூசி போட தகுதிவாய்ந்த மாணவ-மாணவிகள் கோவின் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமில்லை. பதிவு செய்யவில்லை என்றாலும் சுகாதாரத்துறை பணியாளர்கள் பதிவு செய்து தடுப்பூசி செலுத்த உள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் போதுமான அளவில் கோவேக்சின் தடுப்பூசிகள் இருப்பில் உள்ளது. எனவே மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மற்றும் ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தும் பணியினை செயல்படுத்திட சுகாதாரத்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

15 முதல் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டு அரியலூரை கொரோனா வைரஸ் நோய் தொற்று இல்லாத மாவட்டமாக மாற்றும் வண்ணம் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் கொரோனா தடுப்பூசி குறித்த சந்தேகங்களுக்கு 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Similar News