உள்ளூர் செய்திகள்
இறந்து கரை ஒதுங்கும் அரியவகை ஆமைகள்
வேதாரண்யம் கடற்பகுதியில் இறந்து ஆலிவர் ரெட்லி ஆமைகள் கரை ஒதுங்குகின்றன.
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்கா கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம், வெள்ளப்பள்ளம் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் மார்ச் வரை அழிந்து வரும் இனமாக ஆலிவர் ரெட்லி ஆமைகள் கடற்கரைக்கு வந்து முட்டையிட்டு செல்லும்.
இந்த ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து குஞ்சு பொறிப்பகத்தில் வைத்து பாதுகாத்து 55 முதல் 60 நாளில் முட்டை வெளிவந்தவுடன் கடலில் விடுவார்கள்.
அவ்வாறு கடலில் விடப்பட்ட ஆமைக் குஞ்சுகள் வளர்ந்து 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே கடற்கரைக்கு அந்த ஆமைகள் முட்டையிடுவதற்கு வரும்.
1982-ம் ஆண்டு முதல் கோடியக்கரை, வேதாரண்யம் கடற்கரை பகுதியில் சுமார் 3 லட்சம் ஆமை முட்டைகள் எடுத்து சேகரித்து வனத்துறையின் மூலம் கடலில் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது புஷ்பவனம், ஆறுகாட்டுத்துறை கடற்கரை பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு கடலின் உள்ளேயும் வெளியேயும் சேறு நிறைந்திருப்பதால் இந்த கடற்கரை பகுதிக்குக்கு முட்டையிட வரும் ஆலிவர் ரெட்லி ஆமைகள் சேற்றில் சிக்கி இறந்து கரை ஒதுங்கி கிடக்கின்றன.
நேற்று மாலையில் வேதாரண்யம் புஷ்பவனம் கடற்கரையில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஓதுங்கின. இறந்த ஆமைகளை கோடியக்கரை வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் வனத்துறையினர் புதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
ஒரே நாளில் 25-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியதால் இயற்கை ஆர்வலர்கள் மிகுந்த வேதனை அடைந்தனர்.