உள்ளூர் செய்திகள்
கோரைப்புற்கள்

கோரை பாய் உற்பத்தி பாதிப்பு

Published On 2022-01-03 11:13 GMT   |   Update On 2022-01-03 11:13 GMT
மயிலாடுதுறையில் கோரைபுல் அழுகியதால் பாய் உற்பத்தி முடக்கம்
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த தைக்கால் கிராமத்தில் பாரம்பரிய கோரை பாய் உற்பத்தி செய்யப்படுகிறது. 

3 தலைமுறைகளுக்கு மேலாக 100-க்கும் மேற்பட்ட உற்பத்திக் கூடங்களில் கோரைப்புல் கொண்டு படுக்கை பாய், பந்திப்பாய், திருமண வரவேற்பு பாய், குழந்தை பாய்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான பாய்கள் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன.

தைக்காலில் தயாரிக்கப் படும் பாரம்பரியமிக்க பாய்கள் தமிழகம், வெளி மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
 
இந்த பாய் உற்பத்தி தொழிலை நம்பி தைக்கால், கொள்ளிடம், பெரம்பலூர், குன்னம், புத்தூர் எருக்கூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 300 ஏக்கருக்கு மேல் கோரைப்புல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

6 மாத கால பயிரான கோரைப்புல் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருகிறது. அறுவடை செய்யப்பட்ட கோரைப்புல், பாய் தயாரிப்பதற்கு தேவையான அளவுகளில் கிழிக்கப்பட்டு வயல்வெளிகளில் காய வைக்கப்பட்டு இருந்தது. 

தற்போது பெய்த 3 நாள் கனமழை காரணமாக பல்வேறு கிராமங்களிலும் அறுவடை செய்து பதப்படுத்தப்பட்டிருந்த கோரைப்புற்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது.

தண்ணீர் வடிவதற்கு வழியில்லாமல் தொடர்ந்து 3 நாட்களாக மழைநீர் தேங்கியதால் பதப்படுத்தப்பட்ட கோரைப்புற்கள் அழுகி வருகிறது. 

இதனால் கோரைப்புல் சாகுபடி விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மழைநீரை உடனடியாக வெளியேற்ற வடிகால்களை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News