அரியலூரில் ரூ.2 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள இலந்தைக் கூடம் கிராமத்தில் ஒரு காரில் குட்கா கடத்திச் செல்வதாககிடைத்த தகவலின் பேரில் கீழப்பழுவூர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சகாயஅன்பரசு, வெங்கனூர் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பையா ஆகியோர் சம்பவஇடத்துக்குச் சென்று, அங்கு கடைத்தெருவிலுள்ள ஒரு மளிகடை எதிரே நின்று கொண்டிருந்த காரை சோதனைச் செய்தனர். சோதனையில், ரூ.1.82 லட்சம் மதிப்புள்ள குட்கா மற்றும் புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினர் வழக்குப்பதிந்து, காரில் குட்கா கடத்தியதாக திருச்சி மாவட்டம், முசிறி அடுத்த கீழகண்ணுகுளம், உடையார் தெருவைச்சேர்ந்த குமரவேல் (35), அதே பகுதி பழம்புத்தூர் கிராமம்,வெள்ளாளர் தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (20) ஆகிய இருவரை கைது செய்து, அவர்களிடமிருந்து குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன் படுத்தப்பட்ட கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா மற்றும் போதைப் பொருள்களை வாங்கி விற்று வந்த செம்பியக்குடியைச் சேர்ந்த கடை உரிமையாளர் பாண்டியன் (36) மற்றும் புகையிலைப் பொருள்களை பதுக்க இடமளித்த வைத்தியநாத புரத்தைச் சேர்ந்த ஹரிகரன் ஆகியோரை தேடி வருகின்றனர்.