உள்ளூர் செய்திகள்
தேவூரில் கரும்பு அறுவடை பணி தீவிரமாக நடந்ததை காணலாம்

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு கரும்பு அறுவடை பணி தீவிரம்

Published On 2021-12-31 15:51 IST   |   Update On 2021-12-31 15:51:00 IST
கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தேவூர்:

தேவூர் அருகே உள்ள சென்றாயனூர், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, பழக்காரன்காடு, மீனுவாயன்காடு, மேட்டுபாளையம், தண்ணிதாசனூர், பொன்னம்பாளையம், நல்லங்கியூர், கொட்டாயூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் அதிகளவில் கரும்பு பயிரிட்டுள்ளனர். தற்போது அந்த கரும்புகள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்தநிலையில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு தேவூர் பகுதியில் கரும்பு அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. விவசாயிகள், கூலி தொழிலாளர்களை பயன்படுத்தி கரும்புகளை அறுவடை செய்து வருகின்றனர். வெளியூர் வியாபாரிகள் அங்கு முகாமிட்டு கரும்புகளை வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து கரும்பு பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது:-

தேவூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இந்த ஆண்டு 500 ஏக்கர் பரப்பளவில் கரும்பு பயிரிடப்பட்டது. கிணற்று பாசனத்தை பயன்படுத்தி கரும்புகளுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டது. 8 மாதங்கள் நிறைவடைந்த நிலையில் தற்போது கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளன. அவற்றை அறுவடை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த கரும்புகள் சேலம், ஈரோடு, திருப்பூர் போன்ற நகரங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு ரூ.20 முதல் ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகின்றன. சில வியாபாரிகள் தேவூரில் முகாமிட்டு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரும்பு அறுவடை செய்ய விவசாயிகளை வலியுறுத்தி உள்ளனர். இதனால் சில விவசாயிகள் தங்களது வயல்களில் கரும்புகளை அப்படியே விட்டு வைத்துள்ளனர்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கரும்புகள் நன்கு செழித்து வளர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News