உள்ளூர் செய்திகள்
ஆர்ப்பாட்டம் நடந்த போது எடுத்த படம்.

ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், கையில் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டம்

Published On 2021-12-30 15:47 IST   |   Update On 2021-12-30 15:47:00 IST
ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து சீர்காழியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் மண் சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையிடும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் மண்சட்டி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அகோரம் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர்கள் அசோகன், அஞ்சம்மாள், மரகதம், தனலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அகணி ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் வரவேற்று பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் 15-வது நிதி மானியக்குழு அந்தந்த ஊராட்சிகளுக்கு 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது. இதனை தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும். மத்திய அரசின் 15-வது மானிய நிதியை கிராம ஊராட்சியின் வளர்ச்சியை தவிர வேறு எந்த திட்டத்திற்கும் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியை இன்றைய மக்கள் தொகை அடிப்படையில் அனைத்து ஊராட்சிகளுக்கும் பாரபட்சமின்றி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு ஊதியத்தை தனியாக நிதி ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும். ஊராட்சி மன்ற செயலர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி மற்றும் ஆலோசனை இல்லாமல் புதிய செயலர்கள் பணிநியமனம் பணியிட மாறுதல் செய்யக்கூடாது.

கிராம ஊராட்சிகளுக்கு வழங்கப்பட வேண்டிய போதிய சரியான நிதியை சில ஊராட்சிகளுக்கு திட்டமிட்டு வழங்கப்படாமல் தடுக்கப்பட்டு வருகிறது. இந்த போக்கை நீக்க வேண்டும். கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா மருத்துவ தடுப்பு நடவடிக்கை மற்றும் தடுப்பு முகாம் மற்ற செலவுகள் அனைத்தையும் கிராம ஊராட்சி கணக்கு எண் ஒன்றில் இருந்து செய்து வருகிறோம்

அரசு இதுவரை எந்த நிதியையும் எந்த ஊராட்சிக்கும் வழங்கவில்லை. எனவே கொரோனா தடுப்பு நடவடிக்கை என்று தனியாக நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும். அரசு வழிகாட்டுதல் நெறிமுறையின் அடிப்படையில் பணித்தள பொறுப்பாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஊராட்சி மன்ற நிர்வாகத்தில் தலையிடும் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். ஊராட்சி மன்ற தலைவர்கள் கையில் மண்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் விஜயன், லதா, வசந்தி, சோமசுந்தரம், சரளா, அலெக்சாண்டர், தட்சிணாமூர்த்தி மாலினி உள்பட 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமாரிடம் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி கோரிக்கை மனுக்களை ஊராட்சி மன்ற தலைவர்கள் நேரில் வழங்கினர்.

Similar News